பாடல் எண் :3965

வீடி னாருட லிற்பொழி, நீடு வார்குரு திப்புனல்,
ஓடும் யாறென வொத்தது, கோடு போல்வ பிணக்குவை.
24
(இ-ள்) வீடினார்....ஒத்தது - துண்டமாக்கப்பட்டு இறந்தவர்களது உடலினின்றும் பொழியும், நீடி ஓடுகின்ற இரத்த நீர்ப்பெருக்கானது ஓடும் யாற்றைப் போல நிகழ்ந்தது; கோடுபோல்வ பிணக்குவை - இறந்த வீரர்களின் பிணக்குவியல்கள் மலைபோன்றன.
(வி-ரை) உடலிற்பொழி குறுதிப்புனல் - துண்டமாக்கப்பட்ட உடலினின்றும் இரத்தம் நீண்டநேரம் பெருகி வடியும் என்பது. குருதிப்புனல் - உருவகம்.
யாறு என ஒத்தது - ஊறிப் பெருகி ஓடுதல் பொதுத்தன்மை; வினைபற்றிய உவமம்.
பொழி நீடு வார் - பொழிதல் - மிகுதியாய் வருதல்; நீடுதல் - நீண்டு வருதல்; வார்தல் - தொடர்ந்து வருதல்; குருதி - இரத்தம்.
கோடு - மலை; கோடு - யாறு என்பதற்கேற்ப அதன் கரை என்றுரைப்பாருமுண்டு; யாறு மலையினின்றும் ஊறிப் பெருகுதலால் கோடு மலை என்பது பொருந்துவதாம்.
போல்வ - எனப் பன்மையிற் கூறுதலால், குவை - பல குவியல்கள் என்க.
வீடினார் - வெட்டி வீழ்த்தப்பட்டு வீடினார். வினையாலணையும் பெயர்.
என ஒத்தது - என - என்னும்படி. இருபுறமும் ஒத்தலின் இரண்டு உவம உருபுகள் வைத்தார்.