வானி லாவு கருங்கொடி மேனி லாவு பருந்தினம் ஏனை நீள்கழு கின்குலம், மான வூணொ டெழுந்தவே. | 25 | (இ-ள்) வான்.....கொடி -ஆகாயத்தில் பறக்கின்ற கரிய காக்கைகளும், மேல்.....குலம் - அவற்றின்மேல் சஞ்சரிக்கும் பருந்தின் கூட்டமும் ஏனை நீண்ட கழுகுகளின் வகைகளும்; மான.....எழுந்த - பெரிய உணவாகிய மாமிசத்துண்டங்களுடன்மேல் எழுந்தன. (வி-ரை) வான் - என்பதனை மேலுங் கூட்டுக. கொடி - காக்கை. கருங்கொடி - இயற்கையடை. மேல் நிலாவு - கழுகு பருந்து முதலிய பெரும் பறவைகள்; காக்கைகள் பறக்கும் உயரத்தின்மேல் ஆகாயத்தில் மிக்க உயரத்தில் பறக்கும் இயல்பு குறித்தது. ஏனை - குலம் - பருந்தின் பல பகுப்புக்கள். குலம் - இனம் - ஒன்றன் கூட்டம். மான ஊண் - பருத்த மாமிசத் துண்டங்கள்; ஊன் - இங்கு இவற்றின் உணவாகிய மாமிசத்துண்டங்களைக் குறித்தது. மானம் - பருமை - பெருமை. ஆனவூன் - என்றலுமாம். ஆன - முன் கூறியவாறு துண்டமாயினமையிற் பெற்ற தம் உணவு. கொடி - பருந்து - கழுகின் குலம் - எழுந்தவே என்க. எழுந்தவே என்றதனால் அவை முன்னர் மொய்த்துக் கூடி, ஊன் துண்டங்களைப் பிய்த்து உண்டு, மேலும் கொண்டு சென்றன என்பவை உணர்த்தப்பட்டன. தன்மை நவிற்சியணி. |
|
|