வரிவிற் கதைசக் கரமுற் கரம்வாள் சுரிகைப் படைசத் திகழுக் கடைவேல் எரிமுத் தலைகப் பணமெற் பயில்கோல் முரிவுற் றனதுற் றனமொய்க் களமே. | 26 | (இ-ள்) மொய்க்களமே - அந்தப் போர்க்களத்திலே; வரிவில் - கதை - சக்கரம் - முற்கரம் - வாள் - சுரிகைப்படை - சத்தி - கழுக்கடை - வேல் - எரிமுத்தலை - கப்பணம் - எற்பயில் கோல் முரிவுற்றன - வரிவில் முதலாகக் கோலீறாகச் சொல்லியவை ஒன்றோடொன்று தாக்கி முரிந்தனவாய்; துற்றன - நெருங்கியன. (வி-ரை) மொய்க்களம் - போர்க்களம். மொய் - போர். வரிவில்....கோல் - அந்நாளில் போரில் வீரர் கையாளும் படைக்கலங்களை அடைமொழியின்றி அடுக்கிக்காட்டிக் கூறிய கவிநயம் கண்டுகொள்க. வரிவில் - வரிந்து கட்டிய வில்; முற்கரம் - முன்கையிற் பற்றும் சம்மட்டி போன்ற ஒருவகை ஆயுதம்; முசுண்டி என்பர். சுரிகைப்படை - உடைவாள்; சத்தி - சிறு சூலம்; கழுக்கடை - ஈட்டி; எரிமுத்தலை - தீப்போன்று பாயும் சூலம். அக்கினியைச் சொரியும் சூலம் என்பாருமுண்டு; கப்பணம் - யானை நெருஞ்சில் வடிவாக இரும்பினாற் செய்த ஒருவகைப் படை; எல் பயில் கோல் - ஒளிமிக்க அம்பு. வில் - கதை முதலியன உம்மைத்தொகைகள். முரிவுற்றன - முற்றெச்சம், முரிந்தனவாகி. எற்பரிகோல் - என்பதும் பாடம். |
|
|