வடிவே லதிகன் படைமா ளவரைக் கடிசூ ழரணக் கணவாய் நிரவிக் கொடிமா மதினீ டுகுறும் பொறையூர முடிநே ரியனார் படைமுற் றியதே. | 27 | (இ-ள்) வடிவேல்....மாள - வடித்த வேலேந்திய அதிகனது படைகள் மடிதலும்; முடிநேரியனார் படை - முடிசூடிய மன்னராகிய புகழ்ச் சோழரது சேனைகள்; வரை...நிரவி - மலைக்காவல் குழ்ந்த அரணத்தோடு கணவாய்களையும் இடித்துச் சமதரையாக்கி; கொடி....பொறையூர் - கொடிகளையுடைய பெரிய மதிலையுடைய குறிஞ்சி நிலத்துள்ள அவ்வூரை; முற்றியது - வளைந்துகொண்டது. (வி-ரை) மாள - மாண்டொழிந்ததனால், வடிவேலதிகன் படைமாள - என்றது இகழ்ச்சிக் குறிப்பு; வரைக்கடிசூழ் அரணம் - மலையின் இயற்கைக் காவலுடன் செயற்கையாகிய மதில் முதலிய காவலும் பொருந்திய கோட்டை. கடி - காவல். மலையாகிய காவல் சூழ்ந்துள்ள. கணவாய் - மலைகளின் இடையிலுள்ள வழி. நிரவுதல் - தகர்த்து நிலமட்டமாக்குதல். குறும் பொறையூர் - குறிஞ்சி நிலத்துள்ள ஊர். முடிநேரியனார் - முடி - முடிமன்னராகிய; ஏனைச் சிற்றரசர் அரசு புரியினும் முடிசூடும் உரிமை யில்லாதவர் என்பது. நேரியன் - சோழன். முற்றியது - முற்றுகையிட்டது; சூழ்ந்து வளைத்துக்கொண்டது. முற்றுகையிடுதல் என்பர். இதனைப் புறத்திணைகளுள் உழிஞைத்திணை என்பர்; பகைவருடைய மதிலை வளைத்துக் கொள்ளுதல். இது மருதத்தின் புறமென்பது தொல்காப்பியம்; இது நொச்சித் திணைக்கு மறுதலை; மேல்வரும் பாட்டில் நொச்சி பரிந்துடைய என்பது காண்க. |
|
|