பாடல் எண் :3970

மாறுற் றவிறற் படைவா ளதிகன்
நூறுற் றபெரும் படைநூ ழில்பட
பாறுற் றவெயிற் பதிபற் றறவிட்
டேறுற் றனனோ டியிருஞ் சுரமே.
29
(இ-ள்) மாறுற்ற...அதிகன் - பகைமை பூண்ட வலிய சேனைகளையுடையவாள் ஏந்திய அதிகன் நூறுற்ற...பட - அழிந்துபட்ட பெரும்படைகள் குவியல் குவியல்களாக ஆக்கப்பட்டதனால்; பாறுற்ற....சுரமே - சிதறுண்ட மதில்களைக் கொண்ட தனது ஊரினைப் பற்றியிருத்தலை விட்டுப் பெரிய காட்டினுள்ளே ஓடிப்போய் ஒளித்தனன்.
(வி-ரை) மாறு - பகைமை; நூறுதல் - அழிதல்; நூழில் - கொன்று குவித்தல்; இது பற்றிய துறை நூழிலாட்டு எனப்படும். பாறுதல் - சிதறுதல்; ஏறுறுதல் - உட்சென்று ஒளித்தல் என்ற பொருள் தந்து நின்றது.
இருஞ்சுரம் - நெருங்கிய காடு; கானகம் பாலைவனம் என்பாருமுண்டு.
பற்றறவிட்டு - பதிபற்றுக்கோ டாகக் காவல் தரும் என்று எண்ணித் துணிந்திருந்த ஒழுக்கத்தினை விடுத்து; “பற்றறுப்பீர்Ó (3958). விறற்படை - சேனை; “அடற்படையும், உளநிறைவெஞ் சினந்திருகிÓ (3960); அதிகன் படைச்செருக்கும் பதிச்செருக்கும் என்ற இரண்டினையுமே பற்றித் துணிவு கொண்டு பணியாதிருந்தனன்; அவற்றுள் அந்தப் படை முன் பலபோரிலும் வென்றிருந்தது; இப்போது நூறுண்டு நூழில்பட்டது; எயிற்பதி பாறுற்றது. ஆதலின் பற்றற விட்டு ஓடினன் என்பதாம். நூழில்பட்டதனாலும், பாறுற்றதனாலும் என்க.
சுரமே ஓடி ஏறுற்றனன் - இவ் வதிகன் ஏழு அரசர்களைப் போரில் வென்றிருந்து இறுதியில் சேரமான் பெருஞ் சேர லிரும்பொறையால் வெல்லப் பட்டான் என்று பதிற்றுப்பத்து (8ம் பத்து) அறிவிக்கின்றது; இவ்வாறு பின்னரே வென்றொழிய இருந்தானாதலின் இப்போது அருஞ்சுரமே ஓடி ஏறுற்றனன் என்பதாம்.
மாறு - நூறு - (நூழில்) - பாறு - என்ற இவ்வெதுகைத்தொடைகளும் சொற்கருத்துக்களும் காட்டும் போர்பற்றியே, உமாபதி சிவனார் திருத்தொண்டர் புராண வரலாற்றினுள் “மாறுமுகமும் பொருந்தÓ என்ற முருகப்பெருமான் துதியினுள் எடுத்தாண்டு போற்றியிருத்தல் காண்க.