அதிகன் படைபோர் பொருதற் றதலைப் பொதியின் குவையெண் ணிலபோ யினபின் நிதியின் குவைமங் கையர்நீள் பரிமா எதிருங் கரிபற் றினரெண் ணிலரே. | 30 | (இ-ள்) அதிகன்....போயினபின் - அதிகனது சேனையிலே செய்தலில் வெட்டப்பட்ட போர் வீரர்களின் தலைக்குவியல்களின் கூட்டம் எண்ணில்லாதன அனுப்பப்பட்ட பின்பு; நிதியின் குவை...எண்ணிலரே - நிதிக்குவியல்களும், பெண்களும் நீண்ட குதிரைகளும் போரில் சீறி எதிர்க்கும் யானைகளுமாகிய இவற்றை அளவற்ற சேனைவீரர்கள் கொண்டனர். (வி-ரை) போரில் வென்ற அரசனது வீரர்கள் வெல்லப்பட்ட அரசனது படைவீரர்களின் வெட்டுண்டு வீழ்ந்த தலைக்குவியல்களைக் கொண்டு தமது அரசன் முன் கொணர்ந்து காட்டுதல் முன்னாட் போர் முறைகளுள் ஒன்று; “பகைத்தவர் சின்னமும் கொண்டுÓ (கோவையார் - 330). பொருது அற்ற தலைக்குவியல்கள் எண்ணில போயினபின் - பொருதற்ற தலை - போரில் வெட்டப்பட்ட தலைகள்; எண்ணில போயினபின் - குவியல்கள் பலவற்றையும் அனுப்பியபின். நிதியின்....பற்றினர் - வென்றவர், வெல்லப்பட்ட அரசனூரில் பொருள் கவர்தல் போர் முறையாம்; ஆனால் இவை இந்நாளிற்காணும் பழிப்புடைய அநீதச் செயல்களும் அட்டூழியங்களும் அல்ல; இவை போர்முறைப்படி காத்துக்கொண்டு செய்யப்படுவன. பரி கரி இவைகளைக் கொண்டு செல்லுதல் இவை மீளவும் அப்பகையரசுக்கு ஓர்காற் பயன்படாமை கருதியும், மங்கையரைக் கொள்ளுதல் நீதிமுறையிற் காவலின் பொருட்டுமாம். “இரணத்தொழில்Ó என இதனை மேற் குறித்தல் காண்க. |
|
|