பாடல் எண் :3973

மன்னுங் கருவூர் நகர்வா யிலின்வாய்
முன்வந் தகருந் தலைமொய் குவைதான்
மின்னுஞ் சுடர்மா முடிவேல் வளவன்
றன்முன் புகொணர்ந் தனர்தா னையுளோர்.
32
(இ-ள்) மன்னும்...குவைதான் - நிலைபெற்ற கருவூர்த் திருநகரத்தின்வாய்தலில் முன்னே கொண்டுவரப்பட்ட கருந்தலைகள் தொக்க குவியலை; தானையுளோர் - சேனையில் பணிசெய்வோர்; மின்னும்...கொணர்ந்தனர் - விளங்கும் ஒளியினையுடைய பெரிய முடியினைச் சூடிய வேல் ஏந்திய சோழரது முன்னே கொண்டு வந்தனர்.
(வி-ரை) மன்னும் - பழமையாகிய புகழ்நீடிய; நிலைபெற்ற.
வாயிலின் வாய் முன் வந்த - இத்தலைக்குவியல்களை அரசர் கண்காணிக்கும் வேளையிலன்றி முன்னர் நகரினுள்ளே கொண்டு போதல் அதன் சுபத்தன்மைக்கும், தூய்மைக்கும் பலவாற்றானும் பொருந்தாமையின் அவற்றை முன் கொண்டு வந்தாரேனும் நகர வாய்தலில் வைத்தனர் என்பதாம். நகர்வாயில் - அரண்மனைவாயில் என்பாருமுண்டு.
வேல் - ஆயுதப்பொது; வெல்வதற்குக் கருவியாயுள்ளது என்பது பற்றி வந்த பெயர். வளவன் - வளமுடையவன். சோழரது மரபுப் பெயராய் வழங்குவது, ஏனையோர்க்கு இத்தகைய பொய்யாத(காவிரி) நீர்வள மின்மையால்; இங்குப் புகழ்ச்சோழரைக் குறித்தது. வளவன்தன் - வளவனுடைய.
தானையுளோர் - சேனைப்பணிவீரர்.