பாடல் எண் :3975

கண்டபொழு தேநடுங்கி மனங்கலங்கிக் கைதொழுது
கொண்டபெரும் பயத்தினுடன் குறித்தெதிர்சென் றதுகொணர்ந்த
திண்டிறலோன் கைத்தலையிற் சடைதெரியப் பார்த்தருளிப்
புண்டரிகத் திருக்கண்ணீர் பொழிந்திழியப் புரவலனார்,
34
(இ-ள்) கண்ட...தொழுது - கண்டபொழுதே உடல் நடுங்கி மனம் கலங்கிக் கைகூப்பித்தொழுது; கொண்ட......எதிர்சென்று - தம்மை மேற்கொண்டெழுந்த பெரும்பயத்தினுடனே அதுவே குறிப்பாக எதிரே சென்று; அது......பார்த்தருளி - அதனைத் தம்பால் எடுத்துக் கொண்டுவந்த திண்மையுடைய வலிய வீரன் கைக்கொண்ட அத்தலையில் சடையானது நன்கு விளங்கித் தெரியப்பார்த்தருளி; புரவலனார் - அரசராகிய புகழ்ச்சோழர்; புண்டரிக....இழிய - தாமரை போன்ற தமது திருக்கண்களினின்றும் கண்ணீர் பொழிந்து வழிய நின்று,
(வி-ரை) குறித்து எதிர் சென்று - சடை தெரியப்பார்த்தருளி - தலையினைக் கொணர்ந்தவன் கையில், கொணரும் தூரத்தே அதனடுவுள் ஒரு புன்சடை கண்டனர்; இது நிருவிகற்பக் காட்சி. அஃது அவ்வாறுதானோ? என்று பெயர் - சாதி - குணம் - சன்மம் - பொருள் என்ற பொருட்டன்மைகள் ஐந்தும் தெரிந்து இனிது விளங்க உணரும் சவிகற்பக் காட்சி பெற்றுத் துணிவு பெறும் பொருட்டு நினைந்து செய்த செயல்களைக் குறித்து என்றும், எதிர்சென்று என்றும், சடை தெரியப்பார்த் தருளி என்றும் விரித்துக் கூறினார்.
கைத்தலை - இவர்க்குக் காட்டக் கையிற் கொணர்ந்த தலை. கைதொழுது - 3-ம் வேற்றுமைத் தொகை;
கண்ணீர் - இரக்க மிகுதியாலும், அவலமிகுதியால் நேர்ந்த துன்பமிகுதியாலும் வந்த கண்ணீர். புண்டரிகக் கண் - உவமைத்தொகை;