“முரசுடைத்திண் படைகொடுபோய் முதலமைச்சர் முனைமுருக்கி யுரைசிறக்கும் புகழ்வென்றி யொன்றொழிய, வொன்றாமற் றிரைசரித்த கடலுலகிற் றிருநீற்றி னெறிபுரந்தியான் அரசளித்த படிசால வழகி!Óதென வழிந்தயர்வார், | 35 | (இ-ள்) முரசு....ஒன்றொழிய - போர்முரசங்களையுடைய வலியபடைகளைக் கொண்டுபோய் எனது முதன்மை பெற்ற அமைச்சர்கள் போரில் பகைவனை அழித்துப் பிறரால் எடுத்துப் பேசப்படும் புகழ் பூண்ட வெற்றி ஒன்றே பெற்றது தவிர; ஒன்றாமல் - நன்மை பொருந்தாமல்; திரைசரித்த....என - அலைதவழும் கடல் சூழ்ந்த உலகத்தில் திருநீற்று நெறியினை நான் பாதுகாத்து அரசுசெய்த படியானது மிகவும் அழகிதாயிற்று! என்று கூறி; அழிந்து அயர்வார் - மனமழிந்து தளர்வாராகி; (வி-ரை) துன்பமிகுதியில் நிகழ்ந்த மனநிலையும் சொற்சோர்வும் கூறியபடி. இது தமக்குள்ளே எண்ணிச் சொல்லியது. முரசு - போர்முரசு; வெற்றிமுரசென்பாருமுண்டு. முனைமுருக்குதல் - மூண்டபோரினிற் பகைவரை அழித்தல். ஒன்றுஒழிய - ஒன்று மட்டும் பெற்றேனேயன்றி, சாலஅழகிது - தம்மைத்தாமே இகழ்ந்த இகழ்ச்சிக்குறிப்பு மொழி. நெறிபுரந்து - நெறியினிற் சோர்வுபடாமற் காத்து. புரந்துயான் - புரந்தியான் என வந்தது குற்றியலிகரம். ஒன்றாமல் - நன்மை பொருந்தாமல்; ஒன்றுதல் - பொருந்துதல். திருநீற்று நெறியினிற் பொருந்தாமல் அதனைப் பகைத்தோர் தன்மையுட்பட்டு; ஒன்றார் போல. அயர்வார் - முற்றெச்சம்; அயர்வார் - என்றார் என வரும் பாட்டுடன் முடிக்க. ஒன்றாமல் - என்பதும் பாடம். |
|
|