பாடல் எண் :3977

“தார்தாங்கிக் கடன்முடித்த சடைதாங்குந் திருமுடியார்
நீர்தாங்குஞ் சடைப்பெருமா னெறிதாங்கண் டவரானார்;
சீர்தாங்கு மிவர்வேணிச் சிரந்தாங்கி வரக்கண்டும்
பார்தாங்க விருந்தேனோ பழிதாங்கு வே
Óனென்றார்.
36
(இ-ள்) தார்தாங்கி.....முடியார் - போரில் உரியமாலையினை அணிந்து தமது அரசனுக்குரிய கடமையைச் செய்து முடித்த சடைமுடியினையுடைய இவர், நீர்....ஆனார் - கங்கையைத் தரித்த சடையினையுடைய சிவபெருமானது திருநெறியினிலே நின்றவரானார்; சீர்....பழிதாங்குவேன் என்றார் - சிறப்பினையுடைய இவரது சடைத்தலையைத்தாங்கி வரப்பார்த்தும் இப்பூமியைத் தாங்க இருந்தேனோ? பழியினையே தாங்குவேனானேன் என்றார்.
(வி-ரை) தார்தாங்கி - தார் - தற்காத்தலின் போர்த்துறைக்குரிய காஞ்சி - நொச்சி முதலிய போர்மாலை. (3960 - 3969).
கடன் - தம்அரசனுக்குச் செய்யவேண்டிய சோற்றுக்கடன் (3964).
சடைப்பெருமான் நெறிதாங் கண்டவரானார் - சிவநெறி நின்றவர். சடைதாங்கும் திருமுடியாராதலின், அச்சடை அடையாள முடைய சிவபெருமான் நெறிநின்றவர் என்பது அதனாலேதெளியப்படும் என்றதாம். நீர் - கங்கைக்கு ஆகுபெயர்.
தாங்கி வரக்கண்டும் - பழிச்சின்னமாகிய இதனை ஒருவன் கையில் ஏந்தி என்முன் வெற்றிச் சின்னமாகக் கொண்டு வந்து காட்டக் கண்டபின்னரும்.
பார்தாங்க இருந்தேனோ? - உலகம் புரக்க என்று உயிர் தாங்கிக் கொண்டன்றோ இருந்தேன்? கண்டபொழுதே ஆவிகழிந்திலேன் என்பது குறிப்பு. அவ்வாறு ஆவிகழியாமலிருக்கும் காலம் கணந்தோறும் பார்தாங்க இருப்பதாகவே முடியுமன்றோ? என்பதாம். கண்டபோதே ஆவி துறப்பதன்றோ தலையன்பு என்ற குறிப்பு.
பழிதாங்குவேன் - அக்காலம் பார்தாங்குதலன்றி பழியையன்றோ தாங்கி நிற்பேனாவேன்; ஆதலின் பழிதாங்கி நில்லாது உயிர் துறந்து இதற்குத் தீர்வு தேடுவேன் என்பது குறிப்பு.
கண்டறிவானார் - என்பதும் பாடம்.