புக்கபொழு தலர்மாரி புவிநிறையப் பொழிந்திழிய மிக்கபெரு மங்கலதூ ரியம்விசும்பின் முழக்கெடுப்பச் செக்கர்நெடுஞ் சடைமுடியார் சிலம்பலம்பு சேவடியின் அக்கருணைத் திருநிழற்கீ ழாராமை யமர்ந்திருந்தார். | 40 | (இ-ள்) புக்கபொழுது...பொழிந்திழிய - முன் கூறியவாறு தழற்பிழம்பினுள் நாயனார் புகுந்தபோது தெய்வப் பூ மழை நிலமுழுதும் நிறையப் பொழிய; மிக்க....முழக்கெடுப்ப - மிகுந்த பெரிய மங்கல வாத்திய ஓசைகள் ஆகாயத்தில் முழங்க; செக்கர்....அமர்ந்திருந்தார் - அந்திச் செவ்வானம் போன்ற நீண்ட சடைமுடியினையுடைய சிவபெருமானது அந்தப் பெருங்கருணையாகிய திருவடி நீழலின்கீழே நீங்காத நிலையில் எழுந்தருளியிருந்தனர். (வி-ரை) அலர்மாரி - மங்கல தூரியம் இவை ஆகாயத்தில் எழுதல் சிவனருன் வெளிப்பாடுகளின்போது நிகழ்வன. சடை முடியார் - சிவனடையாளமாகிய சடை காரணமாக இச்சரிதம் நிகழ்ந்ததாகலின் இத்தன்மை பற்றிக் கூறி முடித்தருளினார். சிலம்பு அலம்பு - மறைகளாகிய நூபுரங்கள் ஒலிக்கும். அக்கருணைத் திருநிழல் - திருவருளே திருவடியாக உபசரித்துக் கூறப்படுதலின் அடிநிழல் என்பார் கருணைத் திருநிழல் என்றார்; தீப்புகுந்தாராதலின் வெம்மைதாக்காது நிழல்தரப் பெற்றார் என்றது கவிநயம். ஆராமை - மீளாத நிலை. இன்பமாய் நீங்காத நிலை, இரண்டற என்பாருமுண்டு. சேவடி - முத்தி, நான்ற மலர்ப்பதத்தே நாடு என்றபடி, தூக்கிய திருவடி. |
|
|