பாடல் எண் :3985

சினவிடையார் கோயிறொறுந் திருச்செல்வம் பெருக்குநெறி
அனவிடையா ருயிர்துறக்க வருமெனினு மவைகாத்து
மனவிடையா மைத்தொடைய லணிமார்பர் வழித்தொண்டு
கனவிடையா கிலும்வழுவாக் கடனாற்றிச்
செல்கின்றார்.
3
(இ-ள்) சினவிடையார்.....நெறியன இடை - சினம் பொருந்திய விடையினையுடைய இறைவரது திருக்கோயில்கள் தோறும் திருச்செல்வங்களைப் பெருகச் செய்யும் நெறியாகியவற்றின்கண்; ஆருயிர்...காத்து - அரிய உயிரை விடவந்தாலும் அந்நெறிகளைக் காவல் புரிந்து; மனவிடை....வழித்தொண்டு - மனவு மணிவடங்களினிடையே ஆமையோட்டை அணிந்த மார்பினையுடைய இறைவரது வழித்தொண்டினை; கனவிடையாகிலும்......செல்கின்றார் - கனவிலேயும் பிறழாது கடமைபூண்டு செய்துவருகின்றாராகி;
(வி-ரை) திருச்செல்வம் பெருக்கும் நெறி யனவிடை - திருச்செல்வம் - கோயிற்செல்வமாவன - வழிபாட்டுச் சிறப்புக்களும், அவற்றுக் காதாரமாக உள்ள ஏனைச் செல்வ நிலைகளும் ஆம்; திரு - சிவசம்பந்தமான ஐசுவரியம்.
நெறி அன இடை - நெறியில் வருவனவாகியவற்றின்கண்; இடை - ஏழனுருபு.
ஆருயிர்....காத்து - சிவச்செல்வமாகிய நெறிகளைப் பெருக நிகழ்வித்தற்கண் தமது உயிர் துறக்க நேரிட்டாலும் பொருட்படுத்தாது அச் சிவச் செல்வத்தையே காத்து அதனை உயிரினும் மேலானதாகக் கருதி இறைவர் ஆலயத்திற் குறைவுறின் உயிர் விடநேரினும் அவைகாத்து உயிர்விடுவோர் சிவபுரியிற் சேர்வர் என்பது ஆகமவிதி; “சங்கரனாலயத்திற் றவறுறினே சாகத்துணிந்தழிகை பாங்கே, யவரமலன் புரியதனைச் சார்வர்Ó (சிவதருமோ).
மனவு - மனவுமணி - பாசி; (சோகி என்பர்.) அக்குமணியுமாம்.
ஆமைத்தொடையல் - ஆமையோட்டாலாகிய மாலை; மனவிடை...மார்பர் - சிவபெருமான்; இடை - இடையிலே. தொறு - எஞ்சாமைப் பொருள் தருவதோர் இடைச்சொல்.
கனவிடையாகிலும் வழுவாக்கடன் - நனவினில் வழுவாதியற்றுதலே யன்றிக் கனவினும் வழுவாமல் கடமை பூண்டு.
இப்பாட்டும் திரிபு என்ற சொல்லணியுடையது.