பாடல் எண் :3986

ஆறணிந்த சடைமுடியார்க் காதிரைநா டொறுமென்றும்
வேறுநிறை வழிபாடு விளங்கியபூ சனைமேவி
நீறணியுந் தொண்டரணைந் தார்க்கெல்லா நிகழ்பசும்பொன்
நூறுகுறை யாமலளித் தின்னமுது நுகர்விப்பார்,
4
(இ-ள்) ஆறணிந்த....மேவி - கங்கையாற்றினைத் தரித்த சடையினையுடையமுடியாராகிய சிவபெருமானுக்குத் திரு ஆதிரை நாள்தோறும் நித்தியமாக வேறாக நிறைந்த வழிபாடு விளங்கிய பூசனையைச் செய்து; நீறணியும்....அளித்து - திருநீறணிந்த திருத்தொண்டர்களாய் அன்று அணைந்தவர்களுக் கெல்லாம் குறையாமல் நிகழும் நூறு பசும்பொன் அளித்து; இன் அமுது நுகர்விப்பார் - இனிய திருவமுதும் ஊட்டுவாராகி,
(வி-ரை) ஆதிரைநாள் தொறும்...பூசனை மேவி - திருவாதிரை சிவனுக்குகந்த சிறந்தநாள்; “ஆதிரை நாளுகந் தானு மாரூ ரமர்ந்தவம்மானேÓ (தேவா), “ஆதிரைநன் னாளான் றன்னைÓ, “நாளாதிரை யென்றேÓ “ஆதிரை நாள் காணாதேÓ என்பன முதலியவை காண்க. “மதியணி புனித னன்னாள்Ó (278); “சிவனுக்கிசைந்த பேர் வழியி னாளும்Ó (திருத்தொண்டர் புராண வரலாறு - 80); திருவாதிரை நாளில் சிவனுக்கு வழிபாடு செய்தல் சிறப்புடைத்து என்பது சிவாகமங்களின் விதி; பகவத்கீதையினும், கண்ணன் மாதங்களில் மார்கழியாகவும், நாட்களில் (நட்சத்திரங்களில்) திருவாதிரையாகவுமிருக்கிறேன் என்று அருச்சுனனுக்கு உபதேசித்தான் என்ற வரலாறும், அது சிவனது முழு முதன்மையைக் குறிப்பதும் காண்க. ஆளுடைய பிள்ளையார் திருவவதாரமும், அவர் ஞானவமுதுண்டமையும் திருவாதிரை நாளில் நிகழ்ந்தன என்ற வரலாறும் காண்க.
என்றும் - நித்தியமாக; நித்தியம் என்பது நைமித்திகத்தின் வேறாய் நாளும் அமைவது. நைமித்திகம் - நிமித்தம் பற்றியது.
வேறு நிறை வழிபாடு - தாம் இயற்றும் நித்திய வழிபாடுகளினுடன் தனியாய், அந்நாளில் நிறைவாகிய சிறப்பு வழிபாடு.
நீறணியும்....அமுது நுகர்விப்பார் - இந்நாயனார் திருவாதிரை நாள்தோறும் சிவனுக்குச் சிறப்பாக தனிப் பூசனையும், அணைந்த அடியார்களுக்கு எல்லாம் ஒவ்வொருவருக்கு நூறு பொன் கொடுத்துத் திருவமுதூட்டும் வகையால் அடியார் பூசையும் ஆக இரண்டும் செய்துவந்தனர்.
நிகழ் பசும் பொன்1 - நிகழ்தல் - பண்ட மாற்றுக்குதவியாகப் பொன் நாணயமாக நிகழ்தல் - வழங்குதல். முன்னாளில் பொன் என்ற இந்நாணயம் இந்நாட்டில் வழங்கிவந்தது என்பது நாட்டு நடப்புச் சரிதத்தாலறியப்படும் உண்மை. பொன்னாணயம் வழங்குதல் ஒருநாட்டின் செல்வநிலையின் மேம்பாடு குறிக்கும் அடையாளமாம் என்பது பொருணூலோர் கண்டவுண்மை. அவ்வழக்குமாறி, வெள்ளி நாணயமும் மாறி, வெண்கல ஈய நாணயங்களும் காகிதங்களுமே வழங்கி வருதல் இந்நாளில் நமது நாடு பொருளாதாரத் தன்மையில் நிற்கும் மிக்க கீழ்நிலையினைக் குறிக்கு மென்பர் நூலுணர்ந்தோர்.
அணைந்தார்க்கு எல்லாம் - அடியவராய் வரும் எல்லாருக்கும்; ஒவ்வொருவருக்கும் தனித்தனி.
இன்அமுது நுகர்விப்பார் - இனிய திருவமுதூட்டினர்; இது மாகேசுர பூசை எனப்படும். 443 - 3621 - 3673 - முதலியவை பார்க்க.