ஆனசெயன் முறைபுரிவா ரொருதிருவா திரைநாளில் மேன்மைநெறித் தொண்டர்க்கு விளங்கியபொன் னிடும்பொழுதின் மானநிலை யழிதன்மை வருங்காமக் குறிமலர்ந்த ஊனநிகழ் மேனியரா யொருவர்நீ றணிந்தணைந்தார். | 5 | (இ-ள்) ஆன செயல்முறை.....நாளில் - அவ்வாறாயின செயலினைமுறையாகச் செய்வாராகிய நாயனார்; ஒரு திருவாதிரை நாளில்....பொழுதில் - ஒரு திருவாதிரை நாளிலே மேன்மையுடைய சிவநெறித் திருத்தொண்டர்களுக்கு விளங்கிய பொன்கொடுக்கும் போது; மானநிலை....மேனியராய் - மானநிலை அழியும் தன்மை வரும் காமக்குறிகள் தெரியும் குற்றம் பொருந்திய மேனியை யுடையவராய்; ஒருவர்....அணைந்தார் - ஒருவர் திருநீற்றினை அணிந்து வந்தணைந்தனர். (வி-ரை) புரிவார் - விடும் பொழுதில் - ஒருவர் - அணைந்தார் என்று முடிக்க. பிறவினை வினைமுதல் கொண்டு முடிந்தது. ஒரு திருவாதிரை நாளில் - அவ்விசேட பூசை செய்யும் நாளில்; விளங்கிய - அடிமைத் திருப்பண்பு விளங்கிய; ஒருநாள் - ஒப்பற்ற தனிநாள் என்பது குறிப்பு. மானநிலை...ஊனம் நிகழ் மேனியர் - காமக்குறி மலர்தல் ஊனமாம்; காமக்குறி இவை நோயின் அறிகுறிகளும் நகக்குறி முதலியவையுமாம். மீதூரும் பொருந்தாக் காமத்தினால் வெளிப்படக் காணும் (குறிகள்) அடையாளங்கள் பெற்றனர். 1 பொன் என்பது முன் 10, 12-அணா விலையில் வழங்கியது; இப்போது 2, 3 ரூபாய்பெற நிகழ்வது. நம்பிகளுக்கு 12000 பொன் இறைவர் திருமுதுகுன்றத்தில் அருளி னார் என்பது இத்தகைய பொன் நாணயவகையில் கருதப்படுவதாம். மானம் அழிதன்மை - “மானம் படவரின் வாழாமை முன்னினிதேÓ என்பது நீதிநூல். இவர் மானம் அழிதன்மை வரும் காமக் குறிகள் பலவும் வெளிப்பட நிகழ்ந்த ஊனம் விளங்கவும் நின்றனர் என்பதாம். நீறணிந்து - அவ்வூன நிகழ் மேனியில் அதனுடன் பொருந்தாத திருநீற்றினையும் அணிந்து கொண்டு; நீறணிதலே அடியாராந் தன்மை தருவது என உணர்ந்தாராதலின் காமக்குறிவிளங்க மானநிலையழி தன்மை வெளிப்பட இருப்பினும் நீற்றினையும் அணிந்து வந்தார். இச்செயலே மேற்சரித விளைவுக்குக் காரணமாயிற்றென்க. ஒருவர் - இத்தன்மையில் வந்தவர் இவர் ஒருவரேயாம் என்பது; ஒப்பில்லாதவர் என்பதுமாம்; என்னை? இப்புண்ணிய சரித விளைவுக்கு ஏதுவாயிந்தமைபற்றி. |
|
|