பாடல் எண் :3988

மற்றவர்தம் வடிவிருந்த படிகண்டு மருங்குள்ளார்
உற்றவிகழ்ச் சியராகி யொதுங்குவார் தமைக்கண்டு
கொற்றவனா ரெதிர்சென்று கைகுவித்துக் கொடுபோந்தப்
பெற்றியினார் தமைமிகவுங் கொண்டாடிப் பேணுவார்;
6
(இ-ள்) மற்றவர்தம்....படிகண்டு - மற்றும் அவருடைய வடிவம் இருந்த தன்மையினையே பார்த்து; மருங்குள்ளார்...தமைக் கண்டு - பக்கத்தில் இருந்தவர்கள் இகழ்ச்சியோடும் அவரை அணுகாமல் அருவருத்து ஒதுங்குவாராக அதனைக் கண்டு; கொற்றவனார்....பேணுவார் - அரசர் அவரெதிரே சென்று கைகூப்பி வணங்கி அழைத்துக்கொண்டு வந்து அத்தன்மையுடைய அவரை மிகவும் பாராட்டி உபசரிப்பாராகி,
(வி-ரை) ஒதுங்குவார் தமைக்கண்டு - அந்த அடியார் அணிந்த திருநீற்றின் தன்மையினைப் பார்த்தும் அவரது உடற்றன்மையான நிலையினையே கருதி அருவருத்துப் பக்கத்திலிருந்தவர்கள் ஒதுங்கிய நிலையினைப் பார்த்து; இருந்தபடி - இருந்த தன்மையினையே; ஏகாரம் தொக்கது.
பேணுவார் - எண்ணுவார் - திருநீற்றினை அணிந்த நிலையே பேணத்தக்கது என்பது ஒன்று; உலகர் அவ்வாறு பேணாது உடலின்நிலையே கண்டு இகழ்ந்தனராயின் நரகடைவர்; அவ்வாறு அடையாத உலகினரைத் காத்துச் சிவநெறிகாட்டுதல் வேண்டும் என்று உலகர்பாற்கொண்ட இரக்கம் மற்றொன்று என்பார், பேணுவார் என்றும், எண்ணுவார் என்றும் இரண்டு வினை யெச்சங்களாற் கூறினார்; இவற்றுள் பேணுதல் தமது நெறியின் பொருட்டும், எண்ணுதல் உலகர்க்குபகாரமாகப் பிறர் பொருட்டுமாம். முன்னையதே சிறந்தது என்பார் அதனை முன்வைத்தோதினார். அஃது அடிமைநெறி; “தொண்டுபுரி அம்முனைவ ரடியடைவே அரும் பெரும்பே றெனஅடைவார்Ó (3984) என்ற தமது ஒழுக்கம்; பின்னையதும் வேண்டும் என்பது உலகைச் சிவநெறி நிறுத்தத் தாம் ஒழுகிக் காட்டுமுறை பற்றி; “மன்ன னெப்படி மன்னுயி ரப்படிÓ என்பது அரசியல் நெறி; ஆதலின் பிறர் பொருட்டாம் என்பதனை வைப்பு முறையாலுணர வைத்தார். இவ்விரண்டினையும் குறித்தலே இரட்டிப் பொன்கொடுத்த குறிப்புமாம் என்க.
எதிர்சென்று...பேணுவார் - இவை அடியவரை உபசரிக்கு முறை; முன்உரைத்தவை யெல்லாம் பார்க்க. (443 முதலாகிய பல இடங்கள்); அப்பெற்றியினார் - அகரம் முன்னறி சுட்டு; “மானநிலை....நீறணிந்துÓ என்ற அந்தப் பெற்றி என்க.