பாடல் எண் :3989

சீலமில ரேயெனினுந் திருநீறு சேர்ந்தாரை
ஞாலமிகழ்ந் தருநரக நண்ணாம லெண்ணுவார்
பாலணைந்தார் தமக்களித்த படியிரட்டிப் பொன்கொடுத்து
மேலவரைத் தொழுதினிய மொழிவிளம்பி விடைகொடுத்தார்.
7
(இ-ள்) சீலமிலரே......எண்ணுவார் - உலகியல் நெறியாகிய சீலஒழுக்கம் இல்லாதவர்களேயானாலும் திருநீற்றினைச் சார்ந்த அடியவர்களை உலகத்தார் இகழ்ந்து அதனால் கொடிய நரகமடையாமல் உய்யவேண்டும் என்று சிந்திப்பவராய்; பாலணைந்தார்....கொடுத்து - அங்கு அணைந்தவர்களுக்குக் கொடுத்ததனிலும் இரட்டிப்பாக இருநூறு பொன்கொடுத்து; மேலவரை...கொடுத்தார் - அதன்மேல் அவரைத் தொழுது இனிய மொழிகளைச் சொல்லி உபசரித்து அவருக்கு விடை கொடுத்தனர்.
(வி-ரை) சீலம் இலரே....எண்ணுவார் - இஃது உலகவர் பொருட்டு இரக்கம் கொண்டு அரசர் எண்ணியது. அரசர் கடமைகளுள் தம் கீழ் வாழு முயிர்கள் கீழ் நெறிப்பட்டுக் கேடுபடாதபடி காத்தற்பொருட்டுத் தாமே கருணையினால் வழிநடந்து வழிகாட்டுதல் சிறந்த பெரிய கடைமையாம்; “வையகமும் துயர் தீர்கவேÓ (தேவா) என்பது எந்தம் பரமசாரியரது திருவாக்கு; “எவரேனும் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி, யுவராதே யவரவதை கண்டபோது வுகந்தடிமைத் திறநினைந்தங் குவந்து நோக்கிÓ (தேவா அரசு); “நலமில ராக நலமதுண் டாக நாடவர் நாடறி கின்ற, குலமில ராகக் குலமதுண் கடர தவம்புரி குலச்சிறைÓ (தேவாரம் - பிள்ளையார்); “உலகர் கொள்ளு நலத்தின ராயினும், அலகி றீமைய ராயினு மம்புலி, இலகு செஞ்சடை யாரடி யாரெனிற், றலமு றப்பணிந் தேத்துந் தகைமையார்Ó (1699) என்பன முதலியவை காண்க. ஞாலம் - இடவாகு பெயர். “அகத்தும் புறத்தும் பகையறுத்துÓ (3769).
பால் அணைந்தார் - பால் - அப்பால் - அங்கு; அணைந்தார் - அணைந்த ஏனை அடியவர்கள்; இரட்டிப்பொன் - ஏனையோர்க்கு நியதமாகக் கொடுத்த 100 பொன்னை இரட்டித்து 200 பொன்னாக; ஒருநூறு தமது சிவநெறி ஒழுக்கமும், மற்று மொருநூறு உலகியல் நெறியில் உலகரை வழிப்படுத்தற் பொருட்டுமாம் என்க.
மேல் அவரை - மேல் - அதன்மேல் - பின்னர்; மேலவர் - மேம்பாடுடையவராக அவ்வடியவரை என்ற குறிப்புமாம். மேம்பாடாவது முன்கூறியபடி இக பரமாகிய இருபயனும் தரக் காரணமாயிருந்தமை.