பாடல் எண் :3991

விடநாக மணிந்தபிரான் மெய்த்தொண்டு விளைந்தநிலை
உடனாகு நரசிங்க முனையர்பிரான்
கழலேத்தித்
தடநாக மதஞ்சொரியத் தனஞ்சொரியுங் கலஞ்சேருங
கடனாகை யதிபத்தர் கடனாகைக் கவினுரைப்பாம்.
9
(இ-ள்) விடநாகம்....ஏத்தி - விடமுடைய நாகத்தை அணிந்த சிவபெருமானது மெய்த்தன்மையினையுடைய திருத்தொண்டு வழுவாது விளைந்த நிலையினிலே உடனாய் நிகழ்ந்த திருவாழ்வுடைய நரசிங்க முனையரையர் பெருமானது கழல்களைப் போற்றி; தடநாகம்...கவினுரைப்பாம் - பெரியயானைகள் மதநீரினைச் சொரியச் செல்வங்களைப் பொழியும் மரக்கலங்கள் சேரும் கடல் துறைமுகப்பட்டினமாகிய நாகைப் பதியில் வரும் அதிபத்த நாயனாரது நியமமாகிய திருத்தொண்டின் அழகினைச் சொல்லப்புகுகின்றோம்.
(வி-ரை) விடநாகமணிந்தபிரான் மெய்த்தொண்டு - முன்பாட்டில் “பைவளர்வாளரவணிந்தார்Ó (3990) என்ற கருத்து; முன்பாட்டில் சரித நிறைவு கூறினார்; இப்பாட்டில் சரிதத்தினை வடித்தெடுத்த சாரங் கூறுகின்றார்; ஈரிடத்தும் இத்தன்மைபற்றிக் கூறுதல், அருவருக்கத்தக்க விடப்பாம்பினையும் ஆனந்தமளிக்கும் செம்மையும் உடன்கொண்ட இறைவர்பால் பாம்பினைக்கண்டொதுங்காது செம்மையினை நோக்கி அடைந்தால் இன்பமுறுதல் உறுதிப் பயனாதல் போல, அடியார்கள் பால் காணும் உடல் நிலைபற்றிய வேற்றுத் தன்மைகளைக் கண்டு ஒதுங்கமால் செம்மைதரும் திருவேடத்தினையே நோக்கி அடைதலே உறுதிபயக்கும் என்ற உட்கிடையைக் கொண்ட குறிப்புடையது.
மெய்த்தொண்டு விளைந்த நிலை உடனாகும் - தொண்டு விளைந்த நிலையாவது - தொண்டுபுரிதலின் உறைப்பே முதிர்ந்த பண்பு (3889 பார்க்க); உடனாகும் - தொண்டும் தாமும் ஒன்றாதலும் வேறாதலுமின்றி, சிவாத்துவிதமாகிய உடனாகும் பெற்றியில் நிகழ்ந்த தொண்டினிலே எஞ்ஞான்றும் எவ்விடத்தும் சிறத்தல்; இஃது இவர் சரித சாரம்.
தடநாகம் - பெரிய யானை; தனம் - பல்வகைச் செல்வங்கள்; கலம் - மரக்கலம் - கப்பல்; சேரும் - துறைமுகத்துச் சேர்தற்கிடமாகிய. இக்கருத்தை மேல் (3994) விரித்தல் காண்க.
கடனாகை - கடற்கரையில் உள்ள நாகப்பட்டினம். முதனூலில் இச்சிறப்புப் பற்றிப் போற்றுதல் குறிப்பு:
கடனாகை - ஆகை - ஆகுதல்; தொழிற்பெயர்.
கடனாகைக் கடன் - கடனாகச் செய்யும் திருத்தொண்டாகும் செய்கையின் அழகு; தொண்டின் அழகாவது தொண்டு செய்தலிற் சலியாத மன இன்ப மாண்பு. கடன் - தொண்டினெறியினைக் கடமையாக மேற்கொள்ளுதல்.
இப்பாட்டுக் கவிக்கூற்று; இதனால் ஆசிரியர் தம் நியதியின்படி இதுவரை கூறிவந்த சரிதத்தை முடித்துக்காட்டி மேல்வருஞ் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார்.