மன்னி நீடிய செங்கதி ரவன்வழி மரபின் தொன்மை யாமுதற் சோழர்தந் திருக்குலத் துரிமைப் பொன்னி நாடெனுங் கற்பகப் பூங்கொடி மலர்போல் நன்மை சான்றது நாகப்பட் டினத்திரு நகரம். | 1 | (இ-ள்) மன்னி....உரிமை - நிலைபெற்று நீடிவருகின்ற சூரியன் வழியில் வந்த மரபாகிய பழமையாகிய முதன்மைபெற்ற சோழர்களது திருக்குலத்திற்கு உரிமையுடைய; பொன்னி நாடெனும்....மலர்போல் - காவிரி நாடு என்னும் கற்பகப் பூங்கொடியிற் பூத்த மலர்போன்று; நாகப்பட்டினத் திருநகரம் - நாகப்பட்டினம் என்கின்ற திருநகரமானது; நன்மை சான்றது - நன்மையினில் மேம்பட்டது. (வி-ரை) செங்கதிரவன் - ஞாயிறு; செங்கதிரவன் வழிமரபில் - முதற்சோழர் திருக்குலம் - சோழர்கள் சூரிய குலத்தில் வந்தவர்கள் என்பது மரபு; அவ்வாறே பாண்டியர் குலம் சந்திர மரபு; சேரர் குலம் அக்கினி மரபு; என்பதும் வழக்கு. “ஆதித்தன் குலமுதல்வன் மனுவினையா ரறியாதார்Ó (கம்பன்). தொன்மையாம் சோழர் - முதற்சோழர் - என்க. முதல் - முதன்மை பெற்ற. உரிமை - பொன்னி நாடு சோழர்களுக்கே உரியது என்பதாம். பொன்னி நாடெனும் - கற்பக மலர்போல் நாகப்பட்டினத் திருநகரம் நன்மை சான்றது - பொன்னி நாட்டினைக் கற்பகப் பூங்கொடிக்கும், நாகப்பட்டினத்தை அக்கொடியிற் பூத்த மலருக்கும் உவமித்தார்; கற்பகப் பூங்கொடி - கற்பகவல்லி; “வான்றிகழ் கற்பகவல்லிÓ (கந்தபு - மாயைப் - 25); காமவல்லி என்பர். வேண்டியவர் வேண்டியவாறே தருவது. இனிக், கற்பகம் தருவாக வுரைத்துப் பொன்னி கற்பகத்தரு எனவும்; அது பாயும் நாடு கற்பகத்திற் படர்கொடி யெனவும்; அந்நாட்டின் நாகப்பட்டினம் அக்கொடியின் பூவெனவும் உவமைபெற உரைத்தலுமாம்; வேண்டிய வளங்களை எல்லாம் வேண்டும்படியே தருதலால் இவ்வாறு உவமித்தார், கொடியின் பயன் மலராதல்போல் நாட்டின் பயன் இந்நகர மென்பதாம். “நிலவு மெண்ணி றலங்களும் நீடொளி, யிலகு தண்டளி ராக வெழுந்ததோர், உலகமென்னு மொளிமணி வல்லிமேன், மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரைÓ (13) என்ற கருத்து ஈண்டு வைத்து நோக்கற்பாலது. கற்பகத் தருவிற் படரும் அழகிய கொடி என்றலுமாம். நன்மை சான்றது - நன்மையால் மிக்கது; சாலுதல் - நிறைதல். திருநகரம் - சிவச்சார்பு பற்றிய சிறந்த வளமே ஈண்டுக் கருதத் தக்கது, பிறவல்ல; என்பார், திரு என்ற அடைமொழி புணர்த்தி ஓதினார்; திரு - சிவச் செல்வம் பட்டினம் - கடற்கரை ஊரின் பொதுப்பெயர். பட்டணம் என்னும் வடசொல்லுடன் இது மயங்கற்பாற்றன்று. |
|
|