பாடல் எண் :3994

பெருமை யிற்செறி பேரொலி பிறங்கலி னிறைந்து
திரும கட்குவாழ் சேர்விட மாதலின் யாவுந்
தருத லிற்கட றன்னினும் பெரிதெனத் திரைபோற
கரிப ரித்தொகை மணிதுகில் சொரிவதாங் கலத்தால்
3
(இ-ள்) பெருமையில்...பிறங்கலின் - பெருமையினாலே செறிவுடையபெரிய ஓசை விளங்குதலாலும்; நிறைந்து...ஆதலின் - நிறைந்து இலக்குமி வாழும் உறையுளாதலாலும்; யாவும் தருதலில் - வேண்டும் பொருள்களை எல்லாம் தருதலாலும்; கடல்.....பெரிதென - கடலிலும் பெரிதென்று சொல்லும்படி விளங்கி; திரைபோல்....கலத்தால் - அலைபோல் யானைகள், குதிரைத் தொகைகள், மணிகள், துகில்கள் என்பனவாதிய பொருள்களை மரக்கலங்களாற் கொணர்ந்து சொரிவதாம். (அத்திருநகரம்).
(வி-ரை) பெருமையிற் செறி பேரொலி - பெருமை - நற்பண்பினையும், பேர் ஒலி - என்றது அளவினையும் குறித்தன. பெருமையில் - மை - மேகம் என்று கொண்டு, மேகங்களினின்றும் எழும் என்றுரைப்பாருமுண்டு.
கடல் தன்னிலும் பெரிதென - பெருமுழக்கம், திருமகள் சேர்விடம், யாவும் தருதல் - என்ற இம்மூன்று தன்மைகள் கடலினிடத்தும் அதன் கரையில் உள்ள இந்நகரிடத்தும் உள்ளன; ஆயின் இவை இந்நகரில் ஒருங்கே மிகுதியும் எளிதிற் பெறும்படி சிறக்க உள்ளன; ஆதலில் இதுகடலினும் பெரிது என்று சொல்லும்படி என்க.
திரைபோல...சொரிவதாம் - பெரிதென்பதற்குரிய காரணங் கற்பித்தவாறு; திரைபோல் - கரி முதலியவற்றை அடுத்தடுத்து மேன்மேல் வாணிகமுறையில் கொணர்ந்து சொரியும் நிலை கடலுக்கில்லை என்பது குறிப்பு.
கரி....துகில் - இவை வேற்று நாடுகளினின்றும் வாணிகத் துறையில் இங்குக் கொண்டுவரப்படுவன. “இறக்குமதிÓ என்பது. இந்நாள்மரபு. கடற் றுறைமுக வாணிபச் சிறப்புப் பற்றி நகர்வளங் கூறியவாறு; சொரிவது - சொரியப் பெறுவது.
பிறங்கலிற் சிறந்து - என்பதும் பாடம்.