நீடு தொல்புகழ் நிலம்பதி னெட்டினு நிறைந்த பீடு தங்கிய பலபொருண் மாந்தர்கள் பெருகிக் கோடி நீடனக் குடியுடன் குவலயங் காணும் ஆடி மண்டலம் போல்வதவ் வணிகிளர் மூதூர். | 4 | (இ-ள்) நீடு.....பெருகி - நீடியவையாகிய புகழினையுடைய பதினெட்டு நிலங்களிலும் நிறைந்த பெருமையுடைய பல பொருள்களைக் கைக்கொண்ட மக்களும் சார்ந்து பெருகி நிகழ்வதனாலும்; கோடி....குடியுடன் - கோடியளவினும் பெருகிய செல்வக்குடி மக்களுடன் பொலிவதனாலும்; அவ்வணிகிளர் மூதூர் - அந்த அழகு மிகுந்த பழயநகரம்; குவலயம்....போல்வது - இவ்வுலக முழுவதும் தனக்குள் பிரதிபிம்பமாக அடங்கக் காணப்படும் கண்ணாடி மண்டலம்போல்வதாகும். (வி-ரை) மூதூர் குவலயம் காணும் ஆடி மண்டலம் போல்வது என்று கூட்டுக. குவலயம் காணும் - உலக முழுதும் உள்ளடங்கப் பிரதிபிம்பமாகப் பார்க்கக்கூடிய; குவலய முழுதும் காணவுள்ள நிலையாவது 18 நிலங்களின் மக்களும் பொருள்களும் பெருகுவதாலும், இந்நகரினும் இதுவே செல்வத்தின் எல்லை எண்ணக்கூடிய பெருஞ் செல்வங்களுடன் உள்ள குடிகள் நிறைதலாலும் ஆகிய தன்மை. “மெய்யொளியி னிழற்காணு மாடியெனÓ (1274). நிலம் பதினெட்டு - பதினெட்டு மொழிகள் வழங்கும் பதினெட்டுத் தேயங்கள். இத்தேயங்கள், சிங்களம் முதலாகத் தமிழகம் ஈறாகத் தமிழ் நூல்களிற் கூறப்பட்டவை. மொழிகளும் அவ்வத் தேயங்களின் பெயராலே அறியப்படுவன. சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கவுடம், கோசலம், தமிழகம் என்பன. “பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்Ó (திருமந்திரம்). நிலம் பதினெட்டினும் நிறைந்த - பல பொருள் மாந்தர்கள் பெருகி - இவர்கள் வாணிபத்தின் பொருட்டு இங்கு வந்து குழுமுவர்; தத்தம் நாட்டின் வாணிபப் பொருள்களையும் கொணர்வர்; இந்நகர் கடல் துறைமுகப் பட்டினமாதலாலும், செல்வப் பொருட் பண்டங்கள் நிறைதலாலும் வாணிபத்திற்காகப் பல திசைகளிலுமிருந்து மக்கள் வந்து கூடுவர். “ஊறுபொரு ளின்றமி ழியற்கிளவி தேருமட மாதருடனார், வேறுதிசை யாடவர்கள் கூறவிசை தேரும்Ó (4); காசுமணி வார்கனக நீடுகட லோடுதிரை வார்துவலைமேல், வீசுவலை வாணரவை வாரிவிலை பேசுமெழில்; (10) என்று, (சாதாரி - வேதவனம்) இதுபோன்ற கடற் றுறைமுகப் பட்டினமாகிய வேதாரண்யத்தினைப் பற்றி ஆளுடைய பிள்ளையார் அருளியவை இங்கு நினைவு கூர்தற்பாலன. கோடி - எல்லை; கோடி நீள்தனம் - தனங்களின் எல்லை இது என்னும்படி நீண்டதனம். கோடி - என்ற பேர் எண் குறித்ததென்றலுமாம். மண்டலம் - வளைவு. பிறங்கலிற்சிறந்து - என்பதும் பாடம். |
|
|