பாடல் எண் :3996

அந்நெ டுந்திரு நகர்மருங் கலைகடல் விளிம்பிற்
பன்னெ டுந்திரை நுரைதவழ் பாங்கரின் ஞாங்கர்
மன்னு தொன்மையின் வலைவளத் துணவினின் மலிந்த
தன்மை வாழ்குடி மிடைந்தது தடநுளைப் பாடி.
5
(இ-ள்) அந்நெடும்.....ஞாங்கர் - அந்த நீண்ட திரு நகரத்தின் பக்கத்தில் அலைகளையுடைய கடலின் விளிம்பிலே பல நீண்ட அலைகளின் நுரை வந்து தவழ்தற்கிடமாகிய பக்கங்களை அடுத்து; மன்னு...தன்மை - நிலைபெற்ற பழமையில் வலைவீசி மீன்படுக்கும் தொழிலாற் பெறும் வளமுடைய மீன் உணவினில் பெருகிய தன்மையாலே; வாழ்...நுளைப்பாடி - வாழ்வு பெற்ற பரதவர் குடிகள் மிடைந்துள்ளது பெரிய பரதவர் சேரி.
(வி-ரை) கடல் விளிம்பு - கடலின் கரையோரம்.
திரை நுரைதவழ் பாங்கர் - கடலலைகள் கரையின் மோதிச் சிதறிப் பரவும்போது அவ்வலைகளின் நுரை நெடுந்தூரம் சென்று கரையின் தரையிற்றவழும். ஞாங்கர் - அந்த அளவு எல்லையினை அடுத்துள்ள இடம்.
தொன்மையாவது இப்பரதவர் இத்தொழிலையே உரிமையாக வழிவழி நீண்ட காலமாகச் செய்து வாழ்வார் என்ற பழமையுரிமை.
வலைவளம் - வளை வீசிப்படுக்கும் மீனாகிய வளம்; செல்வம்.
வலை வளத் துணவினின் மலிந்த தன்மை வாழ் - வலை வாரிப்படுக்கும் மீன்களை உண்டும், அவற்றை விலைப்படுத்திப் பெறும் நிதியினைக் கொண்டும் வாழ்க்கை நடத்தும்.
“மீனி றைந்தபே ருணவின வேலைவைப் பிடங்கள்Ó (1086) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. வலைவளத் துணவு - வலைவளத்தினை விற்றுவரும் ஊதியத்தால் வாழ்தல் பற்றி உரைக்க எழுந்தது மேல்வரும் பாட்டு; இத்தொழிலும் வாழ்வும் பற்றிக் கூறுவது இந்நாயனாரின் பண்பும் வரலாறும் பற்றி எடுத்தவகையாம்.
குடிமிடைந்தது - குடி நெருக்கமாக உள்ளது.
நுளைப்பாடி - நுளையர் - பரதவர் - மீன்பிடிப்போர்; நுளையர் வாழும் சேரி; பாடி - இருப்பிடம்; இப்பாட்டும் மேல்வரும் மூன்று பாட்டுக்களும் இந்நுளைப்பாடியின் அரிய இயற்கை வரணனையாகிய தன்மைநவிற்சி யணிகள்.