பாடல் எண் :3997

புயல ளப்பன வெனவலை புறம்பணை குரம்பை;
யயல ளப்பன மீன்விலைப் பசும்பொனி னடுக்கல்;
வியல ளக்கரின் விடுந்திமில் வாழ்நர்கள் கொணர்ந்த
கயல ளப்பன பரத்தியர் கருநெடுங் கண்கள்.
6
(இ-ள்) புயல்....குரம்பை அயல் - மேகங்களை அளவிட்டாற் போல வலைகள் புறம்பே உலரவைக்கப் பெற்ற சிறு குடில்களின் பக்கத்தில்; மீன் விலைப்பசும் பொனின் அடுக்கல் அளப்பன - மீன் விலைக்குக் கொள்வோர் கொணர்ந்த பசும் பொன்னின் குவியங்கள் அளவிடப்படுவன; வியல்....கயல் - விரிந்த கடலில் செலுத்தும் மீன்படகின் றொழிலினால் வாழும் பரதவர்கள் கொணர்ந்த கயல் மீன்களை; பரத்தியர் கருநெடுங் கண்கள் அளப்பன - (அக்கயல்களை அவரிடம் பெறும்) பரத்தியரது கரிய நீண்ட கண்கள் அவை இவ்வளவு விலைபெறும் என்பதனைக் காட்சியாலே அளந்து விடுவன.
(வி-ரை) இப்பாட்டுச் சிறந்த தன்மை நவிற்சியின் சுவைபட விளங்குவது
புறம்பு வலை அணை குரம்பை என்க. பரதவர் வலைகளைத் தமது குடிசைகளின் புறம்பே நாளும் உலரவைக்கும் வழக்கம் குறிப்பிடப் பட்டது.
புயல் அளப்பன என - பிரிந்து கவிந்த நீண்ட வலைகள் மேகங்கள் கவிந்து படிந்தாற் போன்றன. அளப்பில் - என்பதும் பாடம்.
அளத்தல் - ஈண்டுக் கவிதல்போல என்ற உவமப் பொருள்பட வந்தது; கடலிற்படியும் மேகங்கள் கடற்கரை விளிம்பில் உள்ள இக்குடிலி டங்களிலும் படர்ந்தனவோ என்னும்படி என்பதும் குறிப்பு.
குரம்பை அயல் மீன் விலைப் பசும் பொனின் அடுக்கல் அளப்பன என்க. இது மீன்கொள்வோர் பரதவர் குடில்களை அடுத்து முன்னதாகவே விலை கொடுத்துப் பெறுதற்குக் காத்திருக்கும் நிலையினை உணர்த்திற்று; பசும் பொனின் அடுக்கல் அளப்பன - மீன்களின் மிக்க விலை மதிப்பையும், பொன் நாணயம் வழங்கிய நிலையினையும் குறித்தது; அடுக்கல் அளத்தலாவது நாணயங்களை அடுக்கி எண்ணிக் கணக்கிட்டு அளவு காணுதல்.
வியல்.....கொணர்ந்த கயல் - திமில் வாழுநர் நள்ளிரவில் மீன் படகுகளைக் கொண்டு கடலின் நீண்டதூரம் சென்று மீன் பிடித்து அதிகாலையிற் கொணர்வர்; இப்படகுகள் பல மரக்கட்டைகளை பொருத்திக் கட்டப்படுதலால் கட்டுமரத் தோணி
1 இதுபற்றி எனது சேக்கிழார் - 131 - 135 பக்கங்கள் பார்க்க. எனப்படும்; தோணி கரைதட்டினபின் அதனை மணலில் ஈர்த்து நுளையன் கரைசேர்த்துக் கயறுகளையும் வலையினையும் தன்னையும் ஒழுங்கு செய்து கொள்ள வேண்டும்; அத்தோணியில் ஒரு கூடையில் அவன் படுத்த மீன்களை வைத்திருப்பான்; கூடையில் அடங்காத அளவு பெரு மீன்கள் அகப்பட்டுவிடின் அவற்றைத் தோணியில் வெளியிடத்தில் சேமித்துக் கொணர்வன்; நுளைச்சி அலைகடல் நீர்விளிம்புக்குள்எத்துணை தூரம் சேமமாய்ச் செல்ல முடியுமோ அத்துணை தூரம் சென்று தோணியிலிருந்தவாறே அம்மீன்களை வாங்கிக்கொண்டு விலைப்பொருட்டு வேகமாய்க் கொண்டு கரை சேர்ந்து பாகுபடுத்தி விற்கத் தொடங்குவாள்; விற்பனை நிலை பரத்தியின் தொழிலாதலால் அவ்வந்நாளும் பரதவன் கொணரும் மீன்களின் மதிப்பினைப் படகிலிருந்தவாறே கண்ணுக் கெட்டிய தூரத்தே தனது கண்பார்வையால் நிச்சயித்து அளந்து விடுவாள்; இத்துணைச் செய்திகள் எல்லாம் புலப்பட “வியலளக்கரின் விடுந்திமில் வாழ்நர்கள் கொணர்ந்த, கயலளப்பன பரத்தியர் கருநெடுங்கண்கள்Ó என்றார். இப்பாட்டின் தன்மை நவிற்சியணிச்சுவை இச்செயலை அதிகாலையிற் கடற்கரை சென்று நேரிற் கண்டார்க்கே நன்கு புலப்படும். அடியேன் அவ்வாறு கண்டுள்ளேன். கண்கள் கயல்போன்றன என்ற உவமை நயம்பட உரைப்பார் பலர். அவர்கள் “வியல்.....கொணர்ந்தகயல்Ó என்றதன் உள்ளுறை குறிப்பினையும், ஈண்டுப் பரத்தியர் கண்களுக்குக் கூறிய சிறப்பினையும் உணர்ந்திலர்.
அளக்கர் - கடல்; வியல் - விரிந்த; திமில் வாழ்நர் - திமில் செலுத்தி மீன்பிடித்தற் றொழிலால் தம் வாழ்க்கையினை நடத்துவோர். பரதவர்; திமில் - மீன்பிடிக்கும் படகு (கட்டுமரத்தோணி).