பாடல் எண் :3999

வலைநெ டுந்தொடர் வடம்புடை வலிப்பவ ரொலியும்
விலைப கர்ந்துமீன் குவைகொடுப் பவர்விளி யொலியுந்
தலைசி றந்தவெள் வளைசொரி பவர்தழங் கொலியும்
அலைநெ டுங்கட லதிரொலிக் கெதிரொலி யனைய.
8
(இ-ள்) வலை...வலிப்பவர் ஒலியும் - வலைகளின் நீண்ட தொடர்களையுடைய வடங்களை இழுத்துச் செம்மை செய்பவர்களது ஒலியும்; விலை...விளி ஒலியும் - விலையினை எடுத்துச் சொல்லி மீன் குவியல்களைக் கொடுப்பவர் வாங்குவோரை அழைக்கும் விளித்தலாகிய ஒலியும்; தலை......தழங்கொலியும் - மிகச்சிறந்த வெள்ளிய சங்குகளைக் கொணர்ந்து குவிப்பவர்களின் மிக்க ஒலியும்; அலை...எதிரொலியனைய - அலைகளையுடைய நீண்ட கடலின் அதிர்க்கின்ற ஒலிக்கு எதிர் ஒலி போன்றுள்ளன.
(வி-ரை) வலை தொடர் நெடுவடம் புடை வலிப்பவர் - கடல் வலைகள் மிகப் பெரியனவாயும் நீண்டும் உள்ளன; அவற்றைக் கரையில் இழுத்து நாடோறும் செம்மை செய்தல் பெரு வேலை. கொடுப்பவர் - நெய்தனிலமாக்களாகிய பெண்டிர்.
விலை.....விளி ஒலி - விலையிண எடுத்துக் கூறி மீன் கொள்வோரை அழைத்தல் பேரொலி தருவது. இது மீன் வாணிப வழக்கு; ஏனைப்பண்டங்களுக்கும் ஏற்ற பெற்றி அமைவதாயினும் விரைவிற் கெடும் இயல்பும், விரைவில் முடிக்க வேண்டிய அவசியமும் உடைய கடற்கரை மீன் வாணிபத்தில் இது மிகவும் வேண்டற்பாலது.
வளை சொரிபவர் - பலவகைப் பெரிதும் சிறிதுமாகிய சங்கு வர்க்கங்களைக் கடலினின்றும் வாரிக் கொணர்ந்து சொரிதலினால் மிக்க ஒலி.
எதிர் ஒலி - பிரதி விம்பமாகிய முழக்கு; அனைய - முன் கூறிய மூன்றும் கடல் ஒலி போன்றன. மிகுதிப்பாடு குறித்தது. தலை - உரிய இடங்களில் என்றலுமாம்.