பாடல் எண் :4000

அனைய தாகிய வந்நுளைப் பாடியி லமர்ந்து
மனைவ ளம்பொலி நுளையர்தங் குலத்தினில் வந்தார்
புனையி ளம்பிறை முடியவ ரடித்தொண்டு புரியும்
வினைவி ளங்கிய வதிபத்த ரெனநிகழ் மேலோர்.
9
(இ-ள்) அனையதாகிய.....அமர்ந்து - முன் கூறிய அத்தன்மைத்தாகிய அந்த நுளைப்பாடியில் வாழ்ந்து; மனை....வந்தார் - இல்வாழ்க்கை வளங்களால் விளங்கும் நுளையர்களது குலத்தினில் அவதரித்தவர்; புனை...மேலோர் - இளம் பிறைச்சந்திரனைச் சூடிய முடியினை உடைய இறைவரது திருவடித் தொண்டு செய்யும் தொழிலில் விளங்கிய அதிபத்தர் என்று நிகழ்கின்ற மேன்மையினை உடையவர்.
(வி-ரை) வந்தார் - மேலோர் - என்க; மேலோர் பெயர்ப் பயனிலை; மேலோர் - வந்தார் என்று கூட்டி முடிப்பதுமாம்.
அடித்தொண்டு புரியும் வினை - திருவடித் தொண்டில் செய்யப்படும் செயல். தொண்டு மனத்தாலும் செய்யப்படுமாதலின், இங்கு, அதனோடு, விளங்கிய செயலினாலும் தொண்டுபுரிபவர் என்றதாம்; அச்செயல், மேல் (4002) உரைக்கப்படும்.
அதிபத்தர் - காரணப் பெயர்; நிகழ்தலாவது அப்பெயர்க் காரணத்துக் கேற்றபடி ஒழுக்கத்தாலும் விளங்குதல்.