பாடல் எண் :4001

ஆங்க வன்பர்தா நுளையர்தந் தலைவரா யவர்கள்
ஏங்கு தெண்டிரைக் கடலிடைப் பலபட வியக்கிப்
பாங்கு சூழ்வலை வளைத்துமீன் படுத்துமுன் குவிக்கும்
ஓங்கு பல்வகை யுலப்பில வுடையரா யுயர்வார்.
10
(இ-ள்) ஆங்கு...தலைவராய் - அந்த அதிபத்தர் என்னும் அன்பர் நுளையர்களின் தலைவராகி; அவர்கள்....இயக்கி - அவர்கள் சத்திக்கின்ற தெளிந்த அலைகளையுடைய கடலில் பலவாறும் தொழில் செய்து; பாங்கு...படுத்து - பக்கங்களிலே சூழும் வலைகளை வளைத்து வீசி மீன்களைப் பிடித்துக் கொணர்ந்து; முன்குவிக்கும் ஓங்கு பல்வகை - முன் குவிக்கின்ற உயர்ந்த பலவகை மீன் குவைகள் அளவில்லாதவற்றையுடையவரா யுயர்ந்தவராகி,
(வி-ரை) ஆங்கு - முன் கூறிய அத்தன்மையுடன்; அசையென்பாரு முண்டு.
ஏங்குதல் - சத்தித்தல்; ஒலித்தல். தன் வளங்களைக் கொள்ளையிடுதல் பற்றி இரங்குதல் என்ற குறிப்புமாம்.
பலபட இயக்குதலாவது - மீன்படுத்தற்றொழிலின் பலவகைகளையும் செய்தல். பலபடவு - பல படகுகளை என்று கொண்டு, படகுகளைச் செலுத்தி என்றலுமாம். படகு - படவு - என வந்தது; படகியக்கி - என்று பாடங்கொள்வாரு முண்டு.
அவர்கள் - தம் கீழுள்ள அக்குலத்தவராகிய அந்நுளையர்கள்; அவர்கள் - இயக்கிப் - படுத்துக் குவிக்கும் - பல்குவை என்க. குவை - மீன் குவியல்கள் “பரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார்Ó (73).
முன்குவிக்கும் பல்குவை - அவ்வவரும் தமது தலைவர்க்குச் செலுத்தும் பகுதியாகிய குவியல்கள்.
உயர்வார் - உயர்தல் - உலகநிலைச் செல்வ வளங்களால் உயர்தல். உயர்வாராகி; முற்றெச்சம் - உயர்வார் - விட்டுவந்தனர் - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. உயர்வார் - அவர்தம் குலத்தளவிலன்றிச் சிவனன்பின்றிறத்தில் மேம்படுகின்றாராய் என்ற குறிப்புமுடையது.