வாகு சேர்வலை நாளொன்றின் மீனொன்று வரினும் ஏக நாயகர் தங்கழற் கெனவிடு மியல்பால் ஆகு நாள்களி லனேகநா ளடுத்தொரு மீனே மேக நீர்படி வேலையிற் படவிட்டு வந்தார். | 12 | (இ-ள்) வாகு...வரினும் - ஒழுங்காகிய வலையிலே ஒருநாளில் ஒரு மீனேவந்தாலும்; ஏகநாயகர்.....ஆகுநாள்களில் - முழு முதல்வராகிய இறைவரது திருவடிக்கு என்று விடுகின்ற இயல்பாலாகிய நாட்களில்; அனேக நாள்...பட - அனேக நாட்கள் தொடர்ந்து ஒரு மீனே மேகம் படியும் கடலிற் கிடைக்க; விட்டுவந்தார் - அதனை இறைவனுக்கென்று கடலில் விட்டு இவ்வாறொழுகி வந்தனர். (வி-ரை) வாகுசேர் வலை - வாகு - ஒழுங்கு; அழகு; வலை - வலையில்; மீன் ஒன்று - ஒரு மீனே. மாகு - என்பது பாடமாயின் வலையிற் சேர்த்தும் மணிகள் என்க. மாகு - வலையின் பரியாயப் பெயர்களுள் ஒன்றுமாம். தேற்றேகாரம் தொக்கது; பிரிநிலையுமாம். மகாஜாலப் பிரயோகத்தில் வரும் ஞானவலையில் 51 அக்கரங்களையும் அவ்வலையின் மணிகளாகக் கூறப்பட்டிருத்தலும் அறிக - (ந. சிவப்பிரகாசக் குருக்களையா அவர்களின் குறிப்பு). இயல்பாலாகு நாள்களில் - இவ்வியல்பால் ஒழுகிய நாளிலே. அடுத்த அனேக நாள் ஒரு மீனே - பட - என்க; அடுத்து - தொடர்ச்சியாக; பட - கிடைக்க. விட்டு வந்தார் - இறைவருக்காகுக என்று கடலில் மீனை விட்டு இவ்வாறொழுகி வந்தனர். அடுத்தடுத் தொருமீன் - என்பனவும் பாடம். |
|
|