பாடல் எண் :4004

மீன்வி லைப்பெரு குணவினின் மிகுபெருஞ் செல்வந்
தான்ம றுத்தலி லுணவின்றி யருங்கிளை சாம்பும்
பான்மை பற்றியும் வருந்திலர்; பட்டமீ னொன்று
மான்ம றிக்கரத் தவர்கழற் கெனவிட்டு மகிழ்ந்தார்.
13
(இ-ள்) மீன்...மறுத்தலின் - மீன் விலைப்படுத்தலினால் பெருகும் உணவுப் பண்டங்களால் மிக்க பெருஞ் செல்வம் இவ்வாறு மறுக்கப்பட்டமையால்; உணவின்றி....வருந்திலர் - உணவில்லாமல் தமது அரிய கிளைஞர்கள் பசியால் வருந்துகின்ற தன்மை பற்றியும் வருந்திலர்; பட்ட....மகிழ்ந்தார் - வலையிற்படுத்ததொரு மீனையும் மான்மறியினைக் கரத்தில் ஏந்திய இறைவரது திருவடிக்கு என விட்டு மகிழ்ந்தனர்.
(வி-ரை) மீன்....செல்வம் - மீன்விற்பதனால் மிக்க உணவுப் பொருள்கள் தேடுதற்காகிய பெருஞ் செல்வம்; அருங்கிளை உணவின்றிச் சாம்பும் பான்மை பற்றியும் வருந்திலர் - என்க.
அருங்கிளை - மனைவி மக்கள் முதலிய சுற்றத்தார்கள். சாம்புதல் - பசியினால் கண்குழிந்து மயங்குதல்; பற்றியும் - உம்மை - உயர்வு சிறப்பு. குங்கிலியக் கலயநாயனார் சரிதம் (838) பார்க்க. கிளை - மரத்தின் கிளைபோலச் சூழ்ந்த சுற்றத்தார்.
மகிழ்ந்தார் - வருந்தாமை மாத்திரையே யன்றி மகிழ்ச்சியினையும் அடைந்தார்.
பட்ட - படுத்த - பிடித்த.
கழற்கு என - கழற்கு ஆக என்று சொல்லி; “சென்று பொற்கழல் சேர்கெனÓ (4008) மான்மறி - மான்கன்று.