பாடல் எண் :4006

ஆன நாளொன்றி லவ்வொரு மீனுமங் கொழித்துத்
தூநி றப்பசுங் கனகநற் சுடர்நவ மணியால்
மீனு றுப்புற வமைத்துல கடங்கலும் விலையாம்
பான்மை யற்புதப் படியதொன்
றிடுவலைப் படுத்தார்.
15
(இ-ள்) ஆன....ஒழித்து - முன்கூறியவாறு ஆகிய நாள் ஒன்றிலே அந்த ஒரு மீனும் அங்கு அகப்படாதொழியச் செய்து; தூய...அமைத்து - தூய நிறமுடைய பசும் பொன்னாலும் ஒளியுடைய நவமணிகளாலும் மீன் உறுப்புக்கள் பொருந்தும்படி அமைத்து; உலகடங்கலும்.....ஒன்று - உலகங்களெல்லாம் விலையாக மதிக்கப்படும் தன்மையில் அற்புதத்தன்மை வாய்த்ததொரு மீன்; இடுவலைப்படுத்தார் - வீசிய வலையினிற் படுப்பித்தனர்.
(வி-ரை) நாள் ஒன்றில் - சிறப்பும் பற்றி அந்நாள் ஒன்று எனப்பட்டது. இணையிலாத ஒன்று.
அவ்வொரு மீனும் - முன் பல நாட்கள் அடுத்துப் படுத்த அந்த ஒரு மீனும், என்று அகரம் முன்னறி சுட்டு; மீனும் - உம்மை முற்றும்மை; ஒழித்து - பெறாதபடி ஒழியச் செய்து.
உண்டார் - (4005) ஒழித்து - அமைத்துப் படுத்தார் - என்று முடிக்க.
அவ்வொரு மீனும் - உலகியலிற் காணும் ஏனை மீன்கள் போன்ற தன்மைய தன்று அவ்வொருமீன்; அன்று படுப்பது உலகிற் பெறப்படாத மேம்பாடுடையது என்பது குறிப்பு.
தூ....அமைத்து - பொன்னாலும் மணியாலும் மீன் உறுப்புக்கள் எல்லாம் உறும்படி உளவாக்கி; இதற்கென்று சிருட்டித்து.
உலகடங்கலும் விலையாம் பான்மை - விலை மதிப்புப் பற்றிக் கூறியது, இந்நாயனார் மீன் விலைப்படுத்தி உண்ணும் வாழ்வினராதலின் இதன் பெருவிலை பற்றி ஆசைகொள்ளார் என்பது உணர்த்த இறைவர் அமைத்த நிலை காட்டுதற்கு.
அற்புதப்படியது - அற்புதம் - காணுந்தோறும் புதிது புதிதாய் விளையும் பெருமித உணர்வு. இவ்வுணர்வை விளைக்கும் தன்மையினை உடையது; படி - தன்மை; படியது - தன்மையினை உடையது.
ஒன்று - இரண்டேனும் பலவேனும் வரின் ஒன்று இறைவனுக்கு விடுப்பர். ஒன்றேவரின் விடுப்பரோ என்ற ஐயமின்றி உலகர் காண; காளத்திநாதர் தமது இடக்கண்ணிலும் குருதி சோர நின்ற திருவுள்ளக் குறிப்பு ஈண்டு வைத்து கருதற்பாலது.
இடுவலை - நாயனாரது ஆட்கள் இடும் வலையின்கண்.
படுத்தார் - படுப்பித்தார்; படச் செய்தருளினர் (அமுது உண்பார்) என்க.
தூ.....படியது - “ஒரு நாட்கனக, நிறமமர் மீன்படÓ என்ற வகைநூற் கருத்தினை விரித்தருளியவாறு.