வாங்கு நீள்வலை யலைகடற் கரையில்வந் தேற ஓங்கு செஞ்சுட ருதித்தென வுலகெலாம் வியப்பத் தாங்கு பேரொளி தழைத்திடக் காண்டலு மெடுத்துப் பாங்கு நின்றவர் “மீனொன்று படுத்தனÓ மென்றார். | 16 | (இ-ள்) வாங்கு....ஏற - மீன்வாரி இழுக்கப்பட்ட நீண்ட வலையானது அலைகளையுடைய கடற்கரையில் வந்து ஏற; ஓங்கு......காண்டலும் - (அதிற்பட்ட மீன்) ஓங்கும் ஞாயிறு உதயமானாற்போல உலகெலாம் அதிசயிக்கும்படி அமைந்த பெரிய ஒளிவீசக் காண்டலும்; எடுத்து.....என்றார் - அதனை எடுத்து அருகு நின்ற பரதவர்கள் மீன் ஒன்றைப் பிடித்தோம் என்று சொன்னார்கள். (வி-ரை) வாங்கு நீள்வலை.....ஏற - வாங்குதல் - இழுத்தல். மீன்படுக்கக் கடலில் வீசிய நீண்ட வலையினை மீன்பட்டவுடன் இழுத்துப் படவிலேனும் கரையிலேனும் சேர்ப்பர்; நீள்வலை - கடல் வலைகளின் பெருநீளத்தைக் குறித்தது; கரையில் வந்தேற - அலைகளினூடே கரையில் வந்து சேர்ந்து எடுக்கப்பட; வாங்கு - வளைந்த என்றலுமாம். ஓங்கு செஞ்சுடருதித்தென - தூநறும் பொன்னும் நவமணிகளும் மீனுறுப்பாக அமைந்ததாகலின் சூரிய ஒளி வருதல்போல என்றார். மெய்பற்றி வந்த உவமம்; சூரியன் உதிக்கும்போது செந்நிறமுடையதாதலின் செஞ்சுடர் என்றார். உலகெலாம் - திருவருள் வெளிப்பட்ட இடமாதலின் இம் முதன்மொழி யாகிய அருள்மொழியாகிய மணியினை இங்குப் பதித்தருளினர் ஆசிரியர். பாங்கு நின்றவர் - அருகில் - அருகில்; பாங்கு - பான்மை என்று கொண்டு மீன்படுத்துக் கொணரும் (பாங்கில்) பண்பியலையுடையார் என்றலுமாம். மீனொன்று படுத்தனம் - இஃது பரிசனத்தவர் தம் தலைவராகிய அதிபத்தருக்குரைத்தது. எடுத்து - அம்மீனை வலையினின்றும் வேறு எடுத்து; மீன் என்றது முன் பாட்டினின்றும் எடுக்கப்பட்டது. திரையில் வந்தேற - என்பதும் பாடம். |
|
|