அகில லோகமும் பொருண்முதற் றாமெனு மளவிற் புகலு மப்பெரும் பற்றினைப் புரையற வெறிந்த இகலின் மெய்த்திருத் தொண்டர்முன் னிறைவர்தாம் விடைமேன் முகில்வி சும்பிடை யணைந்தனர்; பொழிந்தனர் முகைப்பூ. | 18 | (இ-ள்) அகில....புகலும் - எல்லா வுலகுகளும் பொருளையே முன்னாகக் கொண்டு செல்லும் என்னும் பிரமாணத்தோடு சொல்லப்படுகின்ற; அப்பெரும்....தொண்டர்முன் - அந்தப் பெரிய வலிய பொன்னாசை என்னும் பெரும் பற்றினைக் குற்றமற நீக்கிய ஒப்பற்ற மெய்த் திருத்தொண்டர் முன்னே; இறைவர்.....அணைந்தனர் - இறைவர் இடப வாகனத்தின்மேல் முகில்படியும் ஆகாயத்தில் எழுந்தருளிவந்தனர்; பொழிந்தனர் முகைப்பூ - (தேவர்கள்) கற்பகப் பூமழை பொழிந்தனர். (வி-ரை) அகில.....எனும் - எவ்வுலகினும் எச்செயலும் பொருளன்றி யில்லை என்னும் உண்மை; பிரமாணம்; ''பொருளிலார்க்கிவ்வுலகமில்லா தியாங்கு'' (குறள்) “முனிவரு மன்னரு முன்னுவபொன்னான் முடியும்Ó (திருக்கோவை - 332); முனிவருக்கும் தங்கரும முடிக்க இன்றியமையாது வேண்டற்பாலதாகிய பொருளை,இம்மையில் இல்வாழ்க்கையினை யுடைய ஒருவர் (நாயனார்) பற்றறக் களைந்ததனால் இவரது மேன்மை புலப்படும். பெரும்பற்று - விடுதற்கருமை குறித்தது. புரை அற எறிதலாவது - அப்பற்றுத் தம்மிடம் சிறிதும் சாராது முற்றக்களைதல்; வாகீசர் முன்பு திருமுற்றத்தில் பொன்னினொடு நவமணிகள் பொலிந்திலங்க இறைவர் அருளியதும், அவற்றை அவர் பூம்பொய்கையில் எறிந்ததுமாகிய வரலாறு ஈண்டு நினைவுகூர்தற்பாலது. இகல் - ஒப்பு; இகல் - வெறுப்பு என்று கொண்டு அதனை இறைவர்க்கு ஆகும் பண்டமாக இகலின்றி விரும்பிய சிறப்பு என்றலுமாம். புரையற - என்றதும் அக்குறிப்புடையது; தேவர் (பொழிந்தனர்) என்ற எழுவாய் அவாய் நிலையான் வருவிக்கப்பட்டது, மாரி பொழிதற்குரியார் அவரே யாகலின். |
|
|