பஞ்ச நாதமு மெழுந்தன; வதிபத்தர் பணிந்தே யஞ்ச லிக்கரஞ் சிரமிசை யணைத்துநின் றவரை நஞ்சு வாண்மணி மிடற்றவர் சிவலோக நண்ணி யஞ்சி றப்புடை யடியர்பாங் குறத்தலை யளித்தார். | 19 | (இ-ள்) பஞ்ச....எழுந்தன - ஐவகைத் தேவவாத்தியங்களும் எழுந்து ஒலித்தன; அதிபத்தர்...நின்றவரை - நிலமுற விழுந்து வணங்கி எழுந்து குவித்த கைகளைச் சிரமேற் கூப்பி நின்றவராகிய அதிபத்தரை; சிவலோகம்.....பாங்கு உற - சிவலோகத்தைச் சேர்ந்து அழகிய சிறப்பினையுடைய அடியார்களோடு இருக்கும்படி; நஞ்சு.....மிடற்றவர் - விடமுண்ட ஒளிபொருந்திய கண்டத்தினையுடைய இறைவர்; தலையளித்தார் - திருவருள் பாலித்தார். (வி-ரை) (அதிபத்தர் நின்றார்;) நின்றவராகிய அவரை என்று கூட்டுக; நின்றவரைப் பாங்குறத் தலைஅளித்தார் - என்க. தலையளித்தல் - ஒரு சொல்; சிறந்த அருள் வழங்குதல்; தலையளி - பெருங்கருணை. நஞ்சு வாண்மிடறு - கரிய நஞ்சு நீலமணிபோல விளங்கும் கழுத்து. வாள் - ஒளி. சிவலோகம்.....பாங்குற - இவ்வுலகில் அடியாரோ டிருத்தலன்றி மீளா நிலையிற் சிவலோகத்திலும் அடியார்களோடிருக்க. தஞ்சிறப்புடை - என்பதும் பாடம். |
|
|