தம்ம றம்புரி மரபினிற் றகும்பெருந் தொண்டு மெய்ம்மை யேபுரி யதிபத்தர் விளங்குதாள் வணங்கி மும்மை யாகிய புவனங்கண் முறைமையிற் போற்றுஞ் செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம். | 20 | (இ-ள்) தம்மறம்புரி....வணங்கி - கொலைத்தொழில் புரியும் தமது மரபுக்குரியபடி நின்றவாறே தகுதியாகிய பெரிய திருத்தொண்டினை உண்மையிற் பிறழாது செய்த அதிபத்த நாயனாரது விளக்கம் செய்யும் திருவடியை வணங்கி (அத்துணை கொண்டு); மும்மையாகிய...பகர்வாம் - மூன்று உலகங்களும் முறைமையினாற் போற்றுகின்ற செம்மையுடைய நீதியினை உடையராகிய கலிக்கம்ப நாயனாரது திருத்தொண்டினைச் சொல்வோம். (வி-ரை) ஆசிரியர் இதுவரை கூறிவந்த புராணத்தை முடித்துக் காட்டி, இனி வரும் புராணத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார். மறம்புரி மரபு - மீன்படுக்கும் தொழில் கொலைத்தொழில்லாதலால் மறம் என்றார்; தம் அறம் என்று கொண்டு குலப்பண்பு என்பதுமாம். மரபிற் றகும் பெரும் தொண்டு - மரபுத் தொழிலின்கண் நின்றே குலதருமச் செயல் செய்து அதன் வழியே செய்யும் திருத்தொண்டு; “வருபிறப்பின் வழிவந்த, அறம்புரிகொள் கையராயே யடித்தொண்டி னெறிநின்றார்Ó (1052) என்ற நிலை ஈண்டுக் கருதத்தக்கது; தகும் - அக்குலந் தரு நிலைக்குத் தக்க; ஈண்டு தலைமீன்விடுத்த செயலைக் குறித்தது. விளங்குதாள் - தொண்டின் நெறியினை விளக்கும் திருவடி; விளக்கும் என்றது விளங்கும் என நின்றது; பிறவினை; விளங்குதற் கேதுவாகிய. மும்மையாகிய.....செம்மை - மும்மை - மேல் - நடு - கீழ் என்னும் மூன்று உலகங்கள். முறைமையில் - முறையினாலே; முறைமை - நூல்விதி; செம்மை - சிவத்தன்மை. செம்மை - நீதி - சிவதருமம்; மூவுலகும் சிவநெறியாகிய தருமங்களைப் போற்றும் என்க. மும்மை - மூன்று; “தமிழ் மும்மை.Ó செம்மை நீதியார் - சிவதருமத்தில் நின்றவர் சரிதக்குறிப்பு. மரபினிற் றகும் பெருந்தொண்டு - அதிபத்தரது சரிதச் சுருக்கமாகுதல் காண்க. சரிதச் சுருக்கம்: அதிபத்த நாயனார் புராணம் :- நாகப்பட்டினம் என்பது சோழநாட்டிற் சிறந்த கடற் றுறைமுகப் பட்டினம். அதனிற் பரதவர் குலத்தில் வந்தவர் அதிபத்தர் என்ற பெரியார். அவர் பரதவர்களின் தலைவர். அவ்வலைத்தொழிலாற் பெறும் வளத்தினாற் பெருஞ் செல்வமுடையவராயினார்; சிவனடிமைத் திறத்திற் சிறந்து விளங்கினார். நாள்தோறும் படும் மீன்களுள் தலையானதொன்றைச் சிவபெருமானுக் காகுகவென்று இடையறாத அன்பினால் கடலில் விட்டுவந்தார். ஒருநாளில் ஒரு மீனே படினும் அவ்வாறே விட்டுவந்தனர். அந்நாட்களில், தொடர்ச்சியாய் நாடோறும் ஒரு மீனே கிடைத்தது. அவ்வாறு கிடைத்தும் நியமப்படி அதனை விட்டுவந்தனர். அதனால் அவரது செல்வம் குறைந்தது. உணவின்றி அருங் கிளைஞர் வருந்தினர்; அதனாலும் அவர் வருந்தாமல் கிடைத்த அவ்வொரு மீனை இறைவருக்கென விட்டு மகிழ்ந்தனர். இப்படி அனேக நாட்கள் சென்றன. அவருக்கும் உணவின்றித் திருமேனி தளர்ந்தது. ஆயினும் அவர் தமது திருத்தொண்டின் செயலைத் தளராமற் செய்துவந்தார். ஒருநாள் பொன்மயமாய் நவமணிகளின் ஒளியும் கொண்ட உறுப்புக்களுடன் உலகெலாம் விலைபெறும்படியான மீன் ஒன்றை இறைவர் அவரது வலையுட் படும்படி அருளினர். அதுஉதய ஞாயிறு போன்று சுடர்விட்டது. அதனை எடுத்துப் பரதவர் அவருக்கு அறிவித்தனர். அதனைக் கண்ட நாயனார் “இது என்னை ஆளுடைய பெருமானுக்காகுவது; அவர் பொற்கழல் சேர்கÓ என்று கடலலையிற் புகவிடுத்தனர். இவ்வாறு பொருட்பற்றை அறவே எறிந்த அதிபத்தர்முன் இறைவர் இடபத்தில் ஏறி எழுந்தருளி வந்து, காட்சி கொடுத்து, அவருக்குச் சிவலோகத்தில் அடியார்களோடு இனிதிருக்கும் பேற்றை அருளினர். |
|
|