பாடல் எண் :4015

அன்ன வகையாற் றிருத்தொண்டு புரியு நாளி லங்கொருநாள்
மன்னு மனையி லமுதுசெய வந்த தொண்டர் தமையெல்லாம்
தொன்மை முறையே யமுதுசெயத் தொடங்கு விப்பா ரவர்தம்மை
முன்ன ரழைத்துத் திருவடிக ளெல்லாம் விளக்க முயல்கின்றார்,
4
(இ-ள்) அன்ன...நாளில் - முன்கூறிய அவ்வாறாகிய வகையினாலே திருத்தொண்டு செய்து வரும் நாள்களில்; அங்கொருநாள் - அவ்விடத்து ஒரு நாளிலே; மன்னும்...தொடங்குவிப்பார் - நிலைபெற்ற தமது திருமனையில் அமுது செய்ய வந்த திருத்தொண்டர்களை யெல்லாம் தொன்மை முறையிலே அமுது செய்யத் தொடங்குவிப்பாராகி; அவர் தம்மை....முயல்கின்றார் - அவர்களை முன்னர் அழைத்து அவர்களுடைய திருவடிகளை யெல்லாம் விளக்க (இந்நாயனார்) முயல்கின்றாராக.
(வி-ரை) தொன்மை முறையே - தாம் நியம ஒழுக்கமாகக் கொண்டு செய்து வந்த முறையே; பண்டை நூல்களில் விதித்த ஒழுக்க முறையிலே என்றலுமாம். ஒருநாள் - பின் விளைவினால் ஒப்பற்ற நாள் என்பது குறிப்பு.
தொடங்குவிப்பார் - விளக்க முயல்கின்றார் - அமுதூட்டும் செயல்; முதலில் அடியவர்களது பாதம் நீரால் விளக்குதலுடன் தொடங்குவதாம். “கொண்டு வந்து மனைப்புகுந்து குலாவு பாதம் விளக்கியேÓ (443); “கரக மெடுத்தேந்த (3729) - தூய நீராற் சிறுத்தொண்டர் சோதியார் தங்கழல் விளக்கிÓ (3730) என்பன முதலியவை காண்க. பாதப் பிரக்ஷாளணம் என்பது வடமொழி.
முன்னர் - முதலின்; முன்பு அவர் தம் - தம் - சாரியை; அவரை.