திருந்து மனையார் மனையெல்லாந் திகழ விளக்கிப் போனகமும் பொருந்து சுவையிற் கறியமுதும் புனிதத் தண்ணீ ருடன்மற்றும் அருந்து மியல்பி லுள்ளனவு மமைத்துக் கரக நீரளிக்க விரும்பு கணவர்பெருந்தவர்தாளெல்லாம்விளக்கும் பொழுதின்கண், | 5 | (இ-ள்) திருந்தும்...விளக்கி - திருந்தும் மனைவியார் அத்திருமனை முழுதும் விளக்கம் பெற விளக்கித் திருவமுதும் பொருந்தும் சுவைகளில் கறியமுதும் தூய தண்ணீரும் ஆகிய இவற்றுடனே உண்ணும் இயல்பில் உள்ளனவாகிய மற்றைப் பொருள்களையும் செம்மை பெற அமைத்து; கரக நீரளிக்க - கரகத்திலே நீர்வார்க்க; விரும்பு......பொழுதின்கண் - விரும்பும் கணவனார் அந்தப் பெருந்தவர்களுடைய திருவடிகளை யெல்லாம் விளக்கி வரும்போது. (வி-ரை) திருந்தும் - இனி, இச்சரித நிகழ்ச்சியில் நாயனாராற் றடியப்பட்டுச் சிவாபராதத்தினின்றும் உய்ந்து திருந்த நின்ற என்ற குறிப்பும் காண்க. மனையெல்லாம் - அமைத்துக் கரக நீரளிக்க - இவையெல்லாம் விருந்தோம்புதலினும் அடியார்க் கமுதூட்டுதலினும் மனைக் கடனுடையார் செய்ய வேண்டியவை - (3725 - 461 - 462) புனிதத் தண்ணீருடன் - உண்ணும் நீர் மிகப்புனிதமாயும் தூய்மை யுடையதாயும் அமைக்கப்படுதல் வேண்டும்; என்பது பொருந்து - உடல் நலத்துக்கு ஏற்றபடி பொருந்தும். நோய்கள் மிக எளிதிற் பற்றுதல்உண் நீரின் மூலமேயாம் என்பது மருத்துவநூல் முடிபு. திருந்துதல் - திருத்தம் பெறுதல். பருகப் புனிதநீ ரளித்தல் மிக முக்கிய மானதென்றும், ஆனால் அது தான் பெரும்பாலும் கவனிக்கப் பெறுகின்றதில்லை என்றும், காட்ட இதனைச் சிறப்பாய் வேறுபிரித்துக்கூறினார். அளிக்க - விளக்கும் - மனைவியார் நீர்வார்க்கக் கணவனார் திருவடி விளக்குதல் மரபு. “செம்பொற் கரக வாசநீர் தேவி மார்க ளெடுத்தேந்த, வம்பொற் பாதந் தாம் விளக்கி யருளப் புகலும்Ó (3898). விரும்பு - தொண்டில் மிக்க விருப்பமுடைய; அருந்து மியல்பில் உள்ளன - அறுசுவையுடன் கூடிய நால்வகை உண்டிகளை; உள்ளன - குறிப்பு வினைப்பெயர். |
|
|