பாடல் எண் :4018

கையா லவர்தம் மடிபிடிக்கக் காதன் மனையார் “முன்பேவல்
செய்யா தகன்ற தமர்போலுÓ மென்று தேரும் பொழுதுமலர்
மொய்யார் வாசக் கரகநீர் வார்க்க முட்ட, முதற்றொண்டர்,
மையார் கூந்தன் மனையாரைப் பார்த்து மனத்துட் கருதுவார்,
7
(இ-ள்) கையால்.....பிடிக்க - கையினால் அவரது அடிகளைப் பிடிக்க; காதல்...பொழுது - முன்பு நமது ஏவலைச் செய்யாது விட்டுச் சென்ற சுற்றம் இவர் போலும் என்று காதல் மனைவியார் எண்ணும்போது; மலர் ...முட்ட - மலர்கின்ற பூக்கள் பொருந்திய மணமுடைய கரக நீரினை வார்க்கத் தாமதிக்கவே; முதற்றொண்டர்...கருதுவார் - முதன்மை பெற்ற திருத்தொண்டராகிய அவர் கரிய கூந்தலையுடைய மனைவியாரைப் பார்த்துத் தமது மனத்துள்ளே கருதுவாராய்,
(வி-ரை) முன்பு......பொழுது - இஃது மனைவியாரது மனத்துள் எழுந்த கருத்து. தேர்தல் - நினைந்து துணிவு பெறுதல்; தேரும் பொழுது - முட்ட என்க. மனத்துள் தேர்தல் நிகழ அதனால் அப்போது செயல் தாழ்த்தது.
மலர் மொய் ஆர்வாசக் கரக நீர் - பாத்திய நீரில் மலர் சந்தனம் முதலியவை இடுதல் விதிமரபு; பாத்தியம் திருவடி விளக்குதற்கு அமைக்கும் நீர்; கரகம் - குண்டிகை; இடையறாது நீர்வார்த்தற்காகக் கொள்ளும் சிறியமூக்குள்ள பாத்திரம் .
முதற்றொண்டர் - முதல் முதன்மையுடைய.