பாடல் எண் :4019

வெறித்த கொன்றை முடியார்தம் மடியா ரிவர்முன் மேவுநிலை
குறித்து வெள்கி நீர்வாரா தொழிந்தாÓ
ளென்று மனங்கொண்டு
மறித்து நோக்கார் வடிவாளை வாங்கிக் கரகம் வாங்கிக்கை
தறித்துக் கரக நீரெடுத்துத் தாமே யவர்தாள் விளக்கினார்
.
8
(இ-ள்) வெறித்த....இவர் - மணமுடைய கொன்றை சூடிய முடியினையுடைய இறைவரது அடியாராகிய இவர்; முன் மேவும் நிலை ...மனங்கொண்டு - முன்பு மேவும் நிலையினைக் குறித்துத் திருவடி விளக்க நீர்வார்க்காதொழிந்தனர் என்று மனத்திற்றுணிந்து; மறித்து நோக்கார் - மீண்டும் பார்க்காமல்; வடிவாளை வாங்கிக் கரகம் வாங்கி - வடிவாளை உருவி அவர் கையிலிருந்த கரகத்தினையும் வாங்கிக்கொண்டு; கைதறித்து - அவருடைய கையினைத் தறித்து; கரக நீர்...விளக்கினார் கரகத்தினை எடுத்து நீர் வார்த்துத் தாமே அவருடைய தாள்களை விளக்கினார்.
(வி-ரை) வெறித்த - வெறி - மணம் - மணமுடைய. வெறித்த....என்று மனங்கொண்டு - இது மனையாரைப் பார்த்தும், அவர் கரக நீர் வார்க்க முட்டுப்பட்ட நிலையினைக் கண்டும், நாயனார் மனத்துட் கருதித் துணிந்த நிலை; மனங்கொண்டு - துணிந்து.
முன் மேவுநிலை - முன்னர்த் தமது பணியாளா யிருந்த நிலையினை.
வெள்கிநீர் வாரா - தொழித்தாள் “வெள்கிநீர் வாரா விட Ó வகை நூல்.
வாளை வாங்கி - வாளை உருவி; கரகம் வாங்கி - மனைவியார் கையில் இருந்த கரகத்தினைத்தாம் வாங்கிவைத்து; கரகம் அடியார்க்கு உதவும் புனித நீருடைமையால், அதனுடனே தண்டித்தல் தகாதென்று, அதனைத்தாம் வாங்கி நீக்கி என்க. அரசாங்க அடையாளக் குறிகளுடையாரைத் தண்டிக்க நேரின், இந்நாளினும் அவ்வடையாளங்களை அகற்றி மாற்றிப் பின்னரே தண்டம் வகுக்கும் நீதிமுறையும் மரபும் காண்க.
கைதறித்து - நீர்வார்க்காது முட்டுப்பாடு செய்த குற்றம் செய்தது கையாதலின் அதனைத் தடிந்தார் என்க. இவ்வரிய செயலே செயற்கரிய செயலாய்ப் பேறு தந்ததனால் “கைதடிந்த வரிசிலையான்Ó என்று இதனையே தொகைநூலுள் எடுத்தோதிப் போற்றுதல் காண்க.
கரக.....விளக்கினார் - மனைவியார் செய்யத் தவறிய நிலையில் அதனைத் தாமே செய்து திருத்தொண்டினை நிறைவாக்கினார் என்க.
தறித்தக் கரக - கரகம் பிடித்தகை - என்பனவும் பாடங்கள்.