பாடல் எண் :4022

பேருலகி லோங்குபுகழ்ப் பெருந்தொண்டை நன்னாட்டு
நீருலவுஞ் சடைக்கற்றை நிருத்தர் திருப் பதியாகுங்
காருலவு மலர்ச்சோலைக் கன்னிமதில் புடைசூழ்ந்து
தேருலவு நெடுவீதி சிறந்ததிரு வொற்றியூர்.
1
(இ-ள்) பேருலகில்...திருப்பதியாகும் - பெரிய இவ்வுலகிலே புகழினால் ஓங்கிய பெருமையுடைய தொண்டை நன்னாட்டில்; நீர் உலவும்....பதியாகும் - கங்கையாறு உலவும் சடைக் கற்றையினையுடைய நிருத்தர் எழுந்தருளியுள்ள பதியாகும்; காருலவு...திருவொற்றியூர் - மேகங்கள் தவழ்வனவாகி மலர்கள் நிறைந்த சோழைசூழ்ந்த கன்னிமதில் பக்கமெல்லாம் சூழ்ந்து தேர் உலாவுதற்கிடமாகிய நீண்ட வீதிகள் சிறந்த திருவொற்றியூர் என்னும் பதி.
(வி-ரை) பேருலகில்...நன்னாட்டு இதனால் இச்சரிதமுடைய நாயனாரின் நாட்டுச் சிறப்புரைத்தவாறு. புகழ் - பெரு(மை) - நன்(மை) என்ற மூன்றடை மொழிகளாலும் அச்சிறப்புக் குறித்தது கவிநயம். இவையெல்லாம் முன்னர்த் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்துள் விரிக்கப்பட்டன வாதலின் இவ்வாறு அடைமொழிகளாற் சுட்டி யமைந்தார். பெருக்கம் ஆண்டுக் கண்டுகொள்க.
சீருலவும்.....திருப்பதி - இத் திருநகரத்தின் உயிரியல் நிலைபற்றிய தெய்வச் சிறப்பும்; காருலவு.....சிறந்த - உலகியல் நிலையில் உள்ள நகர் வளமுமாம். சிறப்புப் பற்றி முன்னையதை முன்வைத்துக் கூறினார்.
கன்னிமதில் - தோன்றிய நாள்முதல் பகைவர்களால் அழிக்கப்படாது தோன்றியவாறே நிற்கும் நிலைபற்றிக் கன்னி என்பது மரபு. கட்டழியாமை.
நிருத்தர் - இப்பதியில் தியாகேசரும் நிருத்தமுடையராகும் குறிப்பு; தியாகேசரும் ஆடுமாறு வல்லார்.