பாடல் எண் :4024

பன்னுதிருப் பதிகவிசைப் பாட்டோவா மண்டபங்கள்;
அன்னநடை மடவார்க ளாட்டோவா வணியரங்கு;
பன்முறைதூ ரியமுழங்கு விழவோவா பயில்வீதி;
செந்நெலடி சிற்பிறங்க லுணவோவா திருமடங்கள்
3
(இ-ள்) பன்னு......மண்டபங்கள் - யாவராலும் பன்முறையும் ஓதப்படுகின்ற திருப்பதிகங்களின் இசைப்பாட்டுக்களை மண்டபங்கள் ஓவாமல் உடையன; அன்ன...அணியரங்கு - அழகு செய்யப்பட்ட ஆடரங்குகள் அன்னம் போன்ற நடையினையுடைய பெண்களின் ஆடல்களை நீங்காமலுடையன; பன்முறை....பயில் வீதி - மக்கள் பயில்கின்ற வீதிகள் பலமுறையாகச் சத்திக்கும் இயங்களின் முழக்குடன் கூடிய விழாக்களை உடையன; செந்நெல்...திருமடங்கள் - திருமடங்கள் செந்நெல்லரிசியாற் சமைக்கப்பட்டு மலைபோலக் குவியலாக்கிய உணவுப் பெருக்கத்தினை நீங்காமலுடையன.
(வி-ரை) மண்டபங்களுள் பதிகப்பாட்டு ஓவாதுள்ளன என்றும், அரங்குகளுள் ஆட்டோவா; வீதிகளில் விழவோவா; மடங்களில் உணவு ஓவா என்றும் கூட்டி உரைத்தலுமாம்.
ஓவுதல் - நீங்குதல் - ஒழிதல். “ஓவுநாள் உணர்வழியுநாள்Ó (தேவா - நம்பி);
மண்டபங்கள் - கோயிலி னுள்ளும் புறம்பும் இறைவரது விழா முதலியவற்றுக்கு ஆகும் பயன்பற்றி அமைக்கப்படும் இடங்கள்; இவை இந்நாளில் பல பதிகளிலும் பாழாய்க் கிடத்தலும், அன்றி வியாபார இடங்களாகக் கடைப்படுத்தப் படுதலுமே காண்கின்றோம். இவற்றைத் தேவாரப் பயிற்சி, வேதப் பயிற்சி புராணப் படிப்பு முதலிய சமய ஒழுக்க நிலைக்களங்களாகப் பயன்படுத்தினால் அவற்றுக்குச் சாதனமாக உதவுவதுடன், அவற்றுக்கு வேறிடம் தேடும் நிலையும் உண்டாகாது. திருவொற்றியூரில் கோயில் சார்பாக கோயில் மண்டபத்துப் புராணம் வாசிக்கப்பட்டு வந்ததென்று கல்வெட்டுக்களாலறிகின்றோம். பன்னுதல் - பலவாறும் எடுத்துச் சொல்லுதல். பதிக இசை - தேவார திருவாசகப் பதிகங்கள்.
தூரியம் - பலவகையால் பெரியனவும் சிறியனவுமாகிய இயங்கள். தூரிய முழங்கு விழவு - விழாக்களில் பலவகை இயங்கள் முழக்குதல் வழக்கு. விழவு - இறைவனது திருவிழாக்கள்.
செந்நெல் - செந்நெல்லரிசியா லமைக்கப்பட்ட ; அடிசிற் பிறங்கல் - அன்னம் மலை போன்று குவிக்கப்பட்டன என்பது.
திருமடங்கள் - அன்ன சாலைகள்.
மண்டபத்துள் - என்பதும் பாடம்.