பாடல் எண் :4025

கெழுமலர்மா தவிபுன்னை கிளைஞாழ றளையவிழுங்
கொழுமுகைய சண்பகங்கள் குளி்ர்செருந்தி வளர்கைதை
முழுமணமே முந்நீருங் கமழமலர் முருகுயிர்க்கும்;
செழுநிலவின் றுகளனைய மணற்பரப்பின் றிருப்பரப்பு.
4
(இ-ள்) கெழுமலர்.......கைதை - நிறைந்த மலர்களையுடைய குருக்கத்தியும், புன்னையும், கிளைத்து வளரும் குங்குமமரங்களும், இதழ்கள் அவிழ்கின்ற செழித்த முகைகளையுடைய சண்பக மரங்களும், குளிர்ந்த செருந்தியும், வளரும் தாழைகளும் என்ற இம் மரங்கள்; முழுமணமே.....கமழ - கடல் நீரும் முழுமணமே வீச; மலர் முருகு உயிர்க்கும் - தத்தம் மலர்களின் வாசனையைத் தருவன; செழுநிலவின்...பரப்பு - செழுவிய சந்திரிகையைத் தூளாக ஆக்கியது போன்று விளங்குவன மணற்பரப்பினது திருவுடைய பரந்த பண்புகள்.
(வி-ரை) மாதவி - குருக்கத்தி; ஞாழல் - குங்குமமரம்; புலிநகக் கொன்றையுமாம்; கிளை - சிறு செடியாக பல கிளைகளாகக் கிளைத்து வரும் இயல்பு குறித்தது.
தளை அவிழும் - இதழ்கள் அவிழ்கின்ற; வளர்கைதை - மேனோக்கி நீண்ட மடல்களுடன் வளர்வது தாழையினியல்பு; கைதை - தாழை;
முழுமணமே முந்நீரும் கமழ மலர்முருகு உயிர்க்கும் - முன் கூறிய பூக்கள் எல்லாமும் கூடி முழுதும் மணம் வீசுதலால் கடல் நீரும் அந்த மணங் கமழ உள்ளது என்பதாம்; முந்நீர் கடல்; கடலடுத்த நகராதலின் இவ்வாறு கூறினார்; முந்நீரும் - கழிகளின் முடை நாற்ற முடைய கடலின் நீரும் என உம்மை இழிவு சிறப்பு; முருகு - வாசனை; உயிர்த்தல் - வீசுதல்; திருபரப்புப் பரப்பும் மணல், செழுநிலவின் றுகள்அனைய - என்று கூட்டுக. வெண் மணற்பரப்பு செழித்த சந்திரிகையின் சிதறிய தூள் போன்றது என்பதாம்.
துகள் - தூள்; நிலவின் கதிர் தூளானால் அதுபோல்வது.