எல்லையில்பல் கோடிதனத் திறைவரா யிப்படித்தாம் செல்வநெறிப் பயனறிந்து திருவொற்றி யூரமர்ந்த கொல்லைமழ விடையார்தங் கோயிலினுள் ளும்புறம்பும் அல்லுநெடும் பகலுமிடுந் திருவிளக்கி னணிவிளைத்தார். | 7 | (இ-ள்) எல்லையில்.....இறைவராய் -அளவற்றதாகிய பலகோடி செல்வத்துக்கு அதிபராகி; இப்படித்தாம்.....அறிந்து - இத்தன்மைத்தாகிய செல்வம் வந்த வழியின் பயனை அறிந்து; திருவொற்றியூரமர்ந்த - விளைத்தார். - திருவொற்றியூரில் விரும்பி எழுந்தருளிய கொல்லை யிள விடையினையுடைய இறை வரது திருக்கோயிலின் உள்ளேயும் புறத்திலேயும் இரவிலும் நீண்ட பகற் போதிலும் இடுகின்ற திருவிளக்குத் திருப்பணியின் அணியினை விளைத்தார். (வி-ரை) கோடி - பேரெண்; பல முடிபுகளையுடைய செல்வம் என்றலுமாம். கோடி - முடிபு; முடிபுகளாவன உடைகள் - தனம் - தானியம் - வீடு - மாடு முதலியன என்பன. இப்படித்தாம் செல்வ நெறிப் பயன் அறிந்து - இவ்வாறாகத் தாம் பெற்ற செல்வம் வந்த வழியின் பயனை அறிந்து; வந்த வழியாவது முன்பு சிவனைப் பூசித்த நிலை என்பதாம். பயனாவது செல்வம் பெற்ற பயன் சிவனையும் அடியார்களையும் பூசித்தலால் அழியும் பொருளை அழியாமற் செய்வது. கொல்லை - முல்லை; இடபம் முல்லைக் குரியது. அல்லும் நெடும்பகலுந் திருவிளக்கின் அணி விளைத்தார் - நாள் முழுதும் விளக்கிட்டனர் என்க. அல் - இருள் - அதனையுடைய இரவுக்காகி வந்தது; நெடும் பகலில் விளக்கிடுதல் அணியின் பொருட்டாம்; அல்லிற் போலவே நெடும் பகலிலும் இப்பெருந் திருக்கோயிலினுள் திருவிளக்கின் உதவி வேண்டப் படுதல் இன்றும் காண உள்ள நிலை. நெடும் பகல் - மக்கள் மிகவும் சஞ்சரிக்கும் கால நீட்டிப்புக் குறித்தது. அணி விளக்குதல் - வரிசை பெற வேண்டுமிடத்து எரித்தல். புறம்பு விளக்கிடுதல் - இஞ்ஞான்று மலைநாட்டிற் காணவுள்ளது. இடும் - எரிக்கும்; எல்லை பல - எல்லையில்லார் - என்பனவும் பாடங்கள். |
|
|