பாடல் எண் :4031

வளமுடையார் பாலெண்ணெய் கொடுபோய்மா றிக்கூலி்
கொள முயலுஞ் செய்கையுமற் றவர்கொடா மையின்மாறத்
தளருமன முடையவர்தாஞ் சக்கரவெந் திரம்புரியுங்
களனில்வரும் பணிசெய்து பெறுங்கூலி காதலித்தார்,
10
(இ-ள்) வளமுடையார்.....மாற - செல்வ வளமுடையவர்களிடம் எண்ணெய் கொண்டுபோய் விற்றுக்கொடுத்து அதனாற் பெறும்கூலியினைக் கொள்ள முயலுகின்றஅச்செய்கையும் மற்று அவர்கள் எண்ணெய் கொடாமையில் இல்லையாக; தளரும்.....காதலித்தார் - (திருப்பணி முட்டவருதலால்) தளரும் மனமுடைய அந்நாயனார் தாம் செக்கு ஆடும் இடத்தில் வரும் பணிசெய்து அதனாற் பெறும் கூலியினைப் பெற விரும்பியவராய்,
(வி-ரை) வளமுடையார் - “உள்ளோர்Ó என்ற முன்கூறிய கருத்து.
கூலிகொள முயலும் செய்கை - கூலிகொண்டு பணிசெய்ய முயலும் செய்கை.
மற்று அவர் - வளமுடையார்; கூலிக்கு மாறவும் கொடாமையின் அவர்கள் அருளுக்கு வேறானவர் என்பது குறிப்பு. இவ்வாறு உபகரிக்கவும் மறுக்கும் செல்வர் சிலருடைய வண்கண்மை கூறியவாறு.
தளரு மனம் - திருப்பணிக்கு முட்டுப்பாடு நேர்ந்த நிலையினைப் பற்றி மனந்தளர்ந்தனர்.
சக்கர எந்திரம் புரியும் - களன் - செக்கு ஆடும் இடம். பணி - அங்கு அதற்கு உரிய அவ்வேலைகள்.
காதலித்தார் - காதலித்தாராகி; முற்றெச்சம்.