பாடல் எண் :4034

மனமகிழ்ந்து மனைவியார் தமைக்கொண்டு வளநகரில்
தனமளிப்பார் தமையெங்குங் கிடையாமற் றளர்வெய்திச்
சினவிடையார் திருக்கோயிற் றிருவிளக்குப் பணிமுட்டக்
கனவினுமுன் பறியாதார் கையறவா லெய்தினார்.
13
(இ-ள்) மனமகிழ்ந்து...தளர்வெய்தி - மனமகிழ்ச்சியுடனே மனைவியாரைக்கொண்டு வளமுடைய அந்நகரின் கண்ணே பொருள் கொடுப்பார்களை எங்கும் கிடைக்காமையினாலே தளர்ச்சியுற்று; சினவிடையார்....அறியாதார் - சினமுடைய இடபத்தினையுடைய இறைவரது திருக்கோயிலில் திருவிளக்குப்பணி முட்டுதலை இதன் முன்பு கனவிலும் அறியாதவராகிய அந்நாயனார்; கையறவால் எய்தினார் - வேறு செயலற்ற தன்மையினாலே திருக்கோயிலின்கண் வந்து சேர்ந்தனர்.
(வி-ரை) மனமகிழ்ந்து சென்று விலைப்படுத்த முயல என்க.
கொண்டு - தனமளிப்பார் - என்று கூட்டுக; கொள்ளுதல் - விலைப்பண்டமாக ஏற்றுக்கொள்ளுதல்; தனம் - விலைப் பொருள்.
வளநகரில் - தனமளிப்பாரைக் கிடையாமை திருவருளால் நேர்ந்ததன்றி, நகரிலுள்ளாரது வளமின்மையா லானதன்று என்பது குறிப்பு.
திருவிளக்குப் பணிமுட்டக் கனவினுமுன் பறியாதார் - முட்ட - முட்டும்நிலையினை; முன்பு கனவிலும் அறியாமையாவது இதன்முன் தம் வாழ்நாளுள் எந்நாளினும் நனவில் கண்டு அறியாமையே யன்றிக் கனவிற்றானும் அறியாதநிலை; உம்மை இறந்தது தழுவியது. கனவினும் - தம் விழிப்புநிலை வசமிழந்த அந்நிலையினும் என்று சிறப்பும்மையுமாம்.
கையறவு - வேறு செயலற்ற நிலை; தமது பொருட் சார்வு - உடல் முயற்சிச் சார்வு - உயிர்ச் சார்வு முதலிய எல்லாம் தீர்ந்து கழிந்தனவாதலின் கையற்ற நிலையில்; கை - துணை.
எய்தினார் - திருக்கோயிலில் சேர்ந்தனர். திருக்கோயிலில் என்பது குறிப்பெச்சம்.
மனமகிழ்ந்து - இஃது உலகியலின் மேம்பட்ட அன்புநெறி வழக்கு; உலகியல் நிலையில் வைத்துக் காணத் தக்கதன்று; இயற்பகை நாயனார் வரலாற்றின் நுட்பமும் இங்கு வைத்துக் காணத்தக்கது.