திருவிளக்குத் திரியிட்டங் ககல்பரப்பிச் செயனிரம்ப வொருவியவெண் ணெய்க்கீடா வுடலுதிரங் கொடுநிறைக்கக் கருவியினான் மிடறரிய வக்கையைக் கண்ணுதலார் பெருகுதிருக் கருணையுட னேர்வந்து பிடித்தருளி, | 15 | (இ-ள்) திருவிளக்கு.....பரப்பி - திருவிளக்குக்களுக் கெல்லாம் திரியினை இட்டு அங்கு அகல்களை முறையாகப் பரப்பி வைத்து; செயல் நிரம்ப....மிடறரிய - அச்செயல் நிரம்பும்படி கிட்டாது ஒழிந்த எண்ணெய்க்கு ஈடாகத் தமது உடலினிறைந்த உதிரத்தைக் கொண்டு நிறைக்கும்படி கருவிகொண்டு தமது கழுத்தினை அரியவே; அக் கையை - அவ்வாறு அரியும் கையினை; கண்ணுதலார்......பிடித்தருளி - நுதற்கண்ணினையுடைய இறைவர் பெருகும் திருக்கருணையுடனே நேராக வெளிப்பட்டு வந்து அக்காரியம் செய்யவிடாமற் பிடித்தருளி, (வி-ரை) செயல் நிரம்ப - விளக்கிடும் செயலுக்கு வேண்டும் குறை நிரம்ப; திரியிடுதலும், அகல் பரப்புதலும் கூறினாராதலின் எஞ்சியது எண்ணெய் வார்த்தலேயாம்; அது நிரம்ப. ஒருவிய - கிடைக்கா தொழிந்த; ஒருவுதல் - நீங்குதல். ஈடா - ஒப்ப - சமமாக; உடல் உதிரமொடு - தமது உடலின் உதிரத்தினையே எண்ணெயாகக் கொண்டு; கருவி - வாள்; மிடறரிகருவி. அரிய - அரிந்திடவே. அக்கையை - அகரம், மிடறு அரியும் அந்த என முன்னறிசுட்டு. பிடித்தருளி எழுந்தருள - முன்னே பிடித்தருளிப் பின்பு விடைமேல் எழுந்தருள. எண்ணெய்க் குடமா - என்பதும் பாடம். |
|
|