மற்றவர்தம் முன்னாக மழவிடைமே லெழுந்தருள வுற்றவூ றதுநீங்கி யொளிவிளங்க வுச்சியின்மேற் பற்றியவஞ் சலியினராய் நின்றவரைப் பரமர்தாம் பொற்புடைய சிவபுரியிற் பொலிந்திருக்க வருள்புரிந்தார். | 16 | (இ-ள்) மற்றவர்தம்....எழுந்தருள - அவர் முன்பு இளமை பொருந்திய இடபத்தின்மேல் எழுந்தருளி நிற்க; உற்ற...விளங்க - அரிதலினால் பொருந்திய அந்தப் புண் நீங்கி ஒளிபெற்று விளங்க; உச்சியின்மேல்...நின்றவரை; உச்சியின்மேற் பொருந்திய கைகளை அஞ்சலித்தவராகி நின்ற அந்நாயனாருக்கு; பரமர் தாம்.....அருள்புரிந்தார் - சிவபெருமானார் அழகிய சிவலோகத்தில் விளங்க வீற்றிருக்கும்படி அருள் புரிந்தனர். (வி-ரை) உற்ற ஊறு - அரிதலால் உற்ற புண்; ஒளி விளங்க - ஊறுபோய் முன்னையிலும் ஒளிபெற்று விளங்க. அஞ்சலி - அஞ்சலியாகக் கூப்பிய கை. பொலிந்திருக்க - திருவிளக்குப் பணி செய்தாராதலின் அதன் பயனாக ஞான விளக்கத்துடன் பொலிய. ஒளிவிளங்கும் - என்பதும் பாடம். |
|
|