பாடல் எண் :4038

தேவர்பிரான் றிருவிளக்குச் செயன்முட்ட மிடறரிந்து
மேவரிய வினைமுடித்தார் கழல்வணங்கி வியனுலகில்
யாவரெனா தரனடியார் தமையிகழ்ந்து பேசினரை
நாவரியுஞ் சத்தியார் திருத்தொண்டி னலமுரைப்பாம்.
17
(இ-ள்) தேவர்பிரான்.....வணங்கி - தேவர்கள் பெருமானாராகிய இறைவரது கோயிலினில் எரிக்கும் திருவிளக்குப்பணி முட்டியதனால் தமது மிடற்றினை அரிந்து பொருந்துதற்கரிய வினையினைச் செய்து முடித்த கலிய நாயனாரது திருவடிகளை வணங்கி (அத்துணையானே); வியனுலகில் .......பேசினரை - பரந்த உலகத்தில் யாவரே யாயினும் சிவனடியார் தம்மை இகழ்ந்து பேசினவர்களை; நா அரியும்...நலமுரைப்பாம் - நாக்கினை அரியும் சத்தியார் என்னும் நாயனாரது திருத்தொண்டின் நன்மையாகும் வரலாற்றினைச் சொல்வோம்.
(வி-ரை) இது கவிக்கூற்று. ஆசிரியர் தமது மரபின்படி, இதுவரை கூறி வந்த சரிதத்தை முடித்துக் காட்டி மேல்வரும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார்.
திருவிளக்கு....மிடறரிந்து - கலியநாயனாரது சரித சாரம்; மேவரிய வினைமுடித்தார் - “வினை முடிக்கÓ (4035) என முன்னருங் கூறியது காண்க. மேவரிய - யார்க்கும் செய்தற்கு அரிதாகிய.
யாவரெனாது....நாவரியும் - சத்தி நாயனாரது சரிதக் குறிப்பு. யாவரெனாது - உலகநிலையில் யாவரே யாயினும் பாராது.