களமர் கட்ட கமலம் பொழிந்ததேன் குளநி றைப்பது கோலொன்றி லெண்டிசை யளவு மாணைச் சயத்தம்ப நாட்டிய வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர். | 1 | (இ-ள்) களமர்.....நிறைப்பது - மள்ளர்கள் களையாகக் களைந்த தாமரை மலர்கள் பொழிந்த தேனானது குளத்தை நிறைக்க உள்ளது; கோல் ஒன்றில்.....வளவர் - ஒரே செங்கோல் வலிமையால் எட்டுத் திக்குகளிலும் தமது செயத் தம்பங்களை நாட்டி அரசு புரியும் சோழர்களது; காவிரி நாட்டு வரிஞ்சையூர் - காவிரி பாயும் நாட்டில் உள்ள வரிஞ்சையூர் என்பது. (வி-ரை) களமர்...நிறைப்பது - நீர்வளத்தால் நாட்டுச் சிறப்புரைத்தவாறு; தொகைநூலை விரித்து வகைநூல் நகரச் சிறப்புரைத்தது; விரிநூல் அதனினும் விரிந்து அதற்குக் காரணமாகிய நாட்டுச் சிறப்புரைத்த கவிநயம் கண்டு களிக்கத்தக்கது. முன்னையது, மூக்கானுகரும் சுவை கூற, இங்கு நாவின் சுவைபடக் கூறியதும் கவிநயம். கட்ட கமலம் பொழிந்த தேன் - என்றது அன்பரை இகழ்ந்து நாவினை அரியும் இச்சரிதக் குறிப்புப்பட நிற்றலும் காண்க. இஃது இறைச்சிப் பொருட் குறிப்பு (உள்ளுறை) என்ப; கடியப்பட்ட கமலங்களும் குளநிறைக்கும் உபகாரம் செய்தல் போல இந்நாயனார் அரிந்த நாக்களும் உலகைத்திருத்தும் உபகாரக் கருவிகளாம் என்ற குறிப்பும் காண்க. வயல்களில் செங்கழுநீர் பூத்தலை வகைநூல் பேச, அங்குத் தாமரைகள் பூத்தலும் அவை கடியப்படுதலும் தொடர்ந்து கூறிய நயமும் காண்க. கட்ட. - களைபிடுங்கி எறிந்த; குளம் - வயல்களில் அங்கங்கும் உள்ள வாவிகள். தாமரைத் தேன் வடிந்து குளநிறைத்தலாவது வயல்களிற் கட்ட தாமரைகளைக் குளக்கரையில் பல பக்கமும் குவிக்க அப்பூக்களினின்றும் வடிந்த தேன் குளத்திற் பாய்தல்; நிறைத்தல். மிகுதிப் படுத்துதல். கோலொன்றில்....நாட்டிய - கோல் - செங்கோல்; ஒன்று - ஒப்பற்ற; மாறில்லாத; ஏக சக்கராதிபத்யம் என்பது வடமொழி. கோல் ஒன்றில் எண்டிசை - எண்ணின் சுவைபடக் கூறியது கவிநயம்; எல்லாத் திக்குகளிலும் தமது அரசாட்சியின் ஆணை செலுத்திய ன்பது கருத்து அந்நாளில் சோழ மன்னர்களது ஆட்சியின் பரப்புக் கூறியபடி. வளவர் காவிரி நாட்டு - எண்டிசை என்றதனால் வளவர்க்குரியனவாய்ப் பல நாடுகளிருத்தல் கூறப்பட்டமையின், அவற்றுள் காவிரி பாயும் நாடு என்க. காவிரி - பிறிதினியைபு நீக்கிய விசேடண. வரிஞ்சையூர் - தலவிசேடம் பார்க்க. ஆண்டுச் செயத்தறி - என்பதும் பாடம். |
|
|