தீங்கு சொற்ற திருவிலர் நாவினை வாங்க வாங்குதண் டாயத்தி னால்வலித் தாங்க யிற்கத்தி யாலரிந் தன்புடன் ஓங்கு சீர்த்திருத் தொண்டி னுயர்ந்தனர. | 4 | (இ-ள்) தீங்கு....நாவினை - சிவனடியாரைத் தீங்கு சொல்லி இகழ்ந்த திருவில்லாதாந்து நாவினை; வாங்க...வலித்து - சேதித்தலுக்கு வளைந்த தண்டாயத்தினால் இழுத்து; ஆங்கு........அரிந்து - அவ்விடத்திலேயே கூரிய கத்தியினால் அரிந்து; அன்புடன்.....உயர்ந்தனர் - அன்புடனே ஓங்கும் சிறப்புடைய திருத்தொண்டில் உயர்வு பெற்று விளங்கினர். (வி-ரை) தீங்கு - சிவனடியாரை இகழ்ந்த மொழி; பழிமொழி. திருவிலர் - சிவன் புகழினையும் அடியார் புகழினையும் உளங்கொளாதவர்கள் திருவிலார் என்பது; திரு - உய்யும் வழியாகிய சைவமெய்ச் செல்வம்; “உருவிலான் பெருமையை யுளங்கொ ளாதவத், திருவிலார்Ó (பிள் - பைஞ்ஞீலி - காந்தாரபஞ் - 1). திருவிலர் - பாதகர்களுடைய; வாங்க - சேதிக்க; பிடுங்க; வாங்கு - வளைவுடைய; தண்டாயம் - பற்றியிழுக்கும் குறடு போன்றதொரு கருவி; வலித்து - இழுத்து; வலித்தல் - இழுத்தல்; வலிசெய்து என்றலுமாம். அயில் - கூர்மையுடைய. அன்புடன் ஓங்குசீர் திருத்தொண்டின் - நாவை அரியும் செயல் அன்பாமா றென்னை? எனின்; தீங்கு சொன்ன அத்திருவிலார், இம்மையில் இவ்வாறு உடன் தண்டிக்கப்படுதலால் அம்மையில் எரிவாய் நரகம் புக்கழுந்தாமற் காக்க அவர்பால் வைத்த அன்பு; தண்டிக்கப்பட்டார்பால் இகலின்றி இரக்கத்துடனே என்க. அரச தண்டனையின் கருத்தும் இது; “திருந்தாரை வெல்லும்Ó என்ற வகைநூற் கருத்தும் காண்க; இனி, அடியாரை இகழ்ந்து ஏனை உலகரும் நரகம் புகாது இது கண்டு உலகம் உய்தற் பொருட்டு உலகவர்மேல் வைத்த அன்பு என்பதுமாம். “திருநீறு சார்ந்தாரை, ஞாலமிகழ்ந் தருநரக நண்ணாமை எண்ணுவார்Ó (3989) என்றதும் காண்க; இனிச், சிவன்பாலும் அடியார்பாலும் செறியவைத்த அன்பு என்றலுமாம்; உடலோடு அழியத்தக்க உடற்சார்பு உயிர்ச்சார்புகளாகிய மனைவி மக்கள் சுற்றம் இவர்களை ஒருவர் இகழ்ந்தால் கேட்கத் தரியாது பெருங்கலாம் விளைப்பது உலகியலுட் காணப்படும் உண்மை; அழியாது நீடிய உயிர்ச்சார்பாகிய சிவனையும் சிவனடியாரையும் இகழ்ந்தால் கேட்கத் தரியாது ஆவன செய்தல் அவர்பால் அன்புடையோர் செய்கை; வாளா இருப்பவர் அன்பில்லார்; சிவனன்பினாற் செய்யப்படுதலால் இது திருத்தொண்டு - திருப்பணி எனப்பட்டது. சிவனை இகழக்கேட்டால் அவரைத் தண்டனை செய்; அஃதியலாவிடில் சிவசிவ என்று காதைப் பொத்திக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றுவிடு என்பது சிவாகம விதி. “இறைவி கேளா, வஞ்செவி பொத்தி யாற்றா தழுங்கிமெய் பதைப்ப விம்மி, யெஞ்சலின் முதியோன் போகா னேகுவன் யானே யென்னாப், பஞ்சடி சேப்ப வாண்டோர் பாங்கரிற் படர்த லுற்றாள்Ó (கந்தபு - தவங்காண் படலம் 28) என்றபடி, முதியோராய் வந்த இறைவர் சிவனைப் பழித்துக் கூறிய சொற்கேட்ட பார்வதியம்மையார் இவ்வொழுக்கத்தை நயந்து உலகறிவுறுத்திய வரலாறு இங்குக் கருதத் தக்கது. ஓங்குசீர் - முன் கூறியவாறு பலவாற்றாலும் அன்பின் முதிர்ந்த திறலுடைய சிறப்பு. |
|
|