பாடல் எண் :4043

அன்ன தாகிய வாண்மைத் திருப்பணி
மன்னு பேருல கத்தில் வலியுடன்
பன்னெ டும்பெரு நாள்பரி வாற்செய்து
சென்னி யாற்றினர் செந்நெறி யாற்றினர்.
5
(இ-ள்) அன்னது.....திருப்பணி - அத்தன்மைத்தாகிய ஆண்மையினையுடைய திருத்தொண்டின்; மன்னு...செய்து - நிலைபெற்ற பெரிய உலகத்தில் வலிமையுடனே பற்பல பெருங்காலம் அன்புடன் செய்து வந்து; சென்னி....ஆற்றினர் - தலையிற் கங்கையாற்றினைத் தாங்கிய இறைவரது செம்மைநெறித் திருத்தொண்டினைச் செய்துவந்தனர்.
(வி-ரை) அன்னது - முன்பாட்டிற்கூறிய அந்தத் தன்மையுடைய; முன்னறி சுட்டு; ஆகிய - ஆக்கப்பாடுடைய; ஆண்மை - வீரத்தினாலும் திறமையினாலும் வரும் பண்பு. ஆண்மைத் திருப்பணி - வீரத்தொண்டு,
வலியுடன் - பெருந்திறமையாலன்றி யியலாமை பற்றி வலியுடன் என்றார்.
பன்னெடும் பெருநாள் - பற்பல காலங்கள்.
பரிவால் - அன்பினாலே; இகல் முதலாகிய தீக்குணம் காரணமன்றிப் பரிவினாலே; “அன்புடன்Ó (4042) என முன் கூறியது ஒவ்வொரு செயலின் பண்பும், இங்குக் கூறியது அவ்வாறு பலகாலம் தொடர்ந்து செய்யும் தன்மையும் பற்றியன.
சென்னி ஆற்றினர் - சென்னி - சிரம்; ஆற்றினர் - கங்கையாற்றினை உடையவர். செந்நெறி - செம்மை தரும் நெறி; சிவநெறி.
ஆற்றினர் - புரிந்தனர்; ஆற்றுதல் - செய்தல்.
ஆற்றினர் - ஆற்றினர் - சொற்பின் வருநிலை என்னும் சொல்லணி.