பாடல் எண் :4046

வையநிகழ் பல்லவர்தங் குலமரபின் வழித்தோன்றி
வெய்யகலி யும்பகையு மிகையொழியும் வகையடக்கிச்
செய்யசடை யவர்சைவத் திருநெறியா லரசளிப்பார்
ஐயடிக ணீதியா லடிப்படுத்துஞ் செங்கோலார்;
1
(இ-ள்) வையநிகழ்.....தோன்றி - உலகில் புகழ் சிறந்து அரசியற்றும் பல்லவர்களது மரபிலே முறைமையாக அவதரித்து; வெய்ய.....அடக்கி - கொடிய வறுமையும் பகையும் அவற்றால் வரும் துன்பங்களும் நீங்கும்படி அடக்கி; செய்ய....அரசளிப்பார் - சிவந்த சடையினையுடைய இறைவரது சைவத் திருநெறியின்வழியே நின்று அரசாட்சி செய்வாராகி; ஐயடிகள்.....செங்கோலார் - ஐயடிகள் காடவர்கோன் என்னும் அரசர் அரசநீதி முறையினாலே உலகமெல்லாம் தம்மடியின்கீழ் வாழும்படி செய்யும் செங்கோ லாணையினை யுடையராய்;
(வி-ரை) வைய நிகழ் பல்லவர் - ஆசிரியர் தம் காலத்தில் ஆட்சிபுரியும் அரச மரபு என்பார் நிகழ் என்றார்; பல்லவர் - சோழர் வழி மரபுகளுள் வந்த அரச குலம்; இவர்களுக்குரியது இடபக்கொடி என்பர். ஆளுடைய நம்பிகள் காலத்தில் இம்மரபினர் ஆட்சி புரிந்தமை “உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும், பெருமையார்Ó (நம்பி - கோயில்) என்ற திருவாக்கினால் விளங்கும். அமணர்வசப்பட்டு மதிமயங்கி ஆளுடைய அரசுகளை மிறை செய்து, பின், அவரது பெருமை கண்டு சிவன் அடிமைப்பட்ட மகேந்திரவருமரும் இம்மரபினரே; யாவர்; நீண்ட தொடர்பும் அரசர் பெருமையும் குறிக்க வைய நிகழ் என்றார்.
கலி - வறுமை; பகை - உட்பகை புறப்பகைகள்; மிகை - இவற்றால் வரும் துன்பங்கள்; குற்றம்; நெறி - நீதி; வெய்ய - கொடிய; “கொடிது கொடிது வறுமை கொடிதுÓ (ஒளவை)“ நல்குர வென்னுந் தொல்விடம் Ó (திருவா).
சைவத் திருநெறியால் அரசளிப்பார் - உலகினைச் சைவநெறியின் கண்ணே நின்று நிலைபெற ஆள்பவராய்.
செங்கோலார் - அளிப்பார் - (4046) - அளிக்கும்நாளில் (4047) - இகழ்ந்து - இழிச்சி - அளிப்பாராயினார் (4048) என்று இம்மூன்று பாட்டுக்களையும் தொடர்ந்து முடிபு படுத்திக் கொள்க.