திருமலியும் புகழ்விளங்கச் சேணிலத்தி லெவ்வுயிரும் பெருமையுட னினிதமரப் பிறபுலங்க ளடிப்படுத்துத் தருமநெறி தழைத்தோங்கத் தாரணிமேற் சைவமுடன் அருமறையின் றுறைவிளங்க வரசளிக்கு மந்நாளில், | 2 | (இ-ள்) திருமலியும் புகழ் விளங்க - செல்வங்கள் மிகும் புகழ் விளங்கவும்; சேண்...... அமர - விரிந்த இவ்வுலகத்தில் எல்லா வுயிர்களும் பெருமையோடு இனிதாக வாழவும்; தருமநெறி தழைத்தோங்க - நீதிமுறை தழைத்து விளங்கவும்; தாரணி.....துறைவிளங்க - உலகில்சைவநெறியுடனே அரிய வேதநெறியும் விளங்கவும்; பிறபுலங்கள் அடிப்படுத்து - பகைப் புலங்களை ஒடுக்கித் தம்கீழ்த் தங்கும்படி அடங்கச் செய்து; அரசளிக்கும் அந்நாளில் - அரசு செய்கின்ற அந்நாளிலே; (வி-ரை) திருமலியும் புகழ் - திரு - எண்வகை உலகநிலைச் செல்வங்கள்;புகழ் - ஈகையால் வருவது. சேண்நிலம் - சேண் - தூரத்தே அகன்ற; பரவிய, தூரதேயம் என்றலுமாம். ஐயடிகள் - இஃது இந்நாயனாரது பெயர். பல்லவர்கள் பெரும்பாலும் வடமொழிப் பெயர்களையே இட்டுக்கொள்ளுதல்மரபு என்பர்; அப்படியாயின், இவரது இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை, “பத்திக்கடல் ஐயடிகள்Ó என்று வகைநூலில் துதிக்கப்படுவதனால் இவர் இளவயதிலிருந்து இறைபத்தி மிகுந்து ஒழுகிய நிலையினால் ஐயடிகள் (ஐ-தெய்வம்) என்று வழங்கப்பட்டார் போலும்; காடவர் - (பல்லவர்) என்பது இவரது அரச மரபு. இவர் அரசு புரிந்த தலைநகரம் காஞ்சிபுரம். “காஞ்சிக் காடவர்Ó (4052) என்று ஆசிரியர் அறிவித்தருள்கின்றார். எவ்வுயிரும் பெருமையுடன் இனிதமர - மக்களே யன்றி எல்லா உயிர் வருக்கங்களும், அரசனது காவல்பெற்றுக் குறைவின்றி இனிது வாழ; கழறிற்றறிவார் நாயனாரது வரலாறு இங்கு நினைவுகூர்தற்பாலது. அமர - விரும்பி வாழ. பிறபுலங்கள் - திறம்பி நின்ற பகைப் புலங்கள்; அடிப்படுத்து - பகைவரால் வரும் துன்பங்களை நீக்கி அவர்களை அடக்கித் தம் வயப்படுத்தி. தரும நெறி - இஃது உலகியற் றருமநீதி முறை, சைவமுடன் அருமறையின் துறை - சைவநெறியும் வேதத்துறையும்; “வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கÓ (1899); இங்குச் சைவத் திறத்தினை முன்கூறியது இந்நாயனார் பற்றி ஒழுகிய சைவ ஒழுக்கத்தினைச் சிறப்பாகக் குறித்தற்கு. சிறப்புப் பற்றி உடன் உருபைச் சைவத்துடன் புணர்த்தி ஓதினார். |
|
|